தயாரிப்புத் துறை ‘பிஎம்இடி’ ஊழியர்களுக்கு கூடுதல் உதவி

உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களுடைய தொழிலை உருமாற்றுவதற்குத் தேவையான ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அரசாங்கம் கூடுதல் உதவிகளை வழங்கவிருக்கிறது.

இதே நோக்கத்தோடு உற்பத்தித் துறையில் நுழைய விரும்பும் ஊழியர்களுக்கும் அரசு உதவிக்கரம் நீட்டவிருக்கிறது.

இயந்திர மனிதர்களை வடிவமைப்பது, செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புத்தாக்கத்துடன் தொழில்களை உருமாற்ற நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் தேவை. இதை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தித் துறைக்கான வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டத்தின் (Professional conversion programme) கீழ் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (PMET) ஆகியோர் உள்ளிட்ட 1,000 பேருக்கு மூன்று ஆண்டுகாலத்தில் அரசாங்கம் உதவி செய்யவிருக்கிறது.

‘டிரான்ஸ்பிளஸ்’ தொழிற்சாலைக்கு நேற்று வருகையளித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்த விவரங்களை வெளியிட்டார்.

“இன்னும் பல பேர் உற்பத்தித் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுவரை 13,000 பேர் வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டத்தினால் பலன் அடைந்துள்ளனர். இவர்களில் பத்தில் ஒருவர் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள்,” என்று உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.

2106ஆம் ஆண்டிலிருந்து 1,400 பேர் உற்பத்தித் துறையில் பயிற்சிகளை மேற்கொண்டனர். இதனால் 600 நிறுவனங்கள் பலன் அடைந்தன என்றார் அவர்.

புதிய துறையில் நுழைந்து வர்த்தகத்துக்கு புதிய உத்வேகம் அளிக்க ஊழியர்கள் மாற்றுத் திறன்களை பெறுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த செப்டம்பர் மாதம் கூடுதலாக 1,000 இடங்களுக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நிபுணத்துவ ேவலை மாற்றுத் திட்டத்தின் கீழ் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்தி உற்பத்தித் துறையில் உள்ள உற்பத்தித் துறை நிபுணர்கள், தொழில்நுட்ப விற்பனை பொறியாளர்கள் அல்லது நிர்வாகிகள் போன்ற வேலைகளில் சேரலாம். இந்தத் திட்டம் வாழ்க்கைத் தொழிலை மாற்றி  வேறு ஒரு துறைக்கு மாற விரும்புவோருக்கு பேருதவியாக இருக்கும்.