சீனாவுடனான $1.5 பி. ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது இலங்கை

இலங்கையில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள கோத்தபய அரசாங்கம் சீன நிறுவனத்தோடு ஏற்படுத்தப்பட்ட ஹம்பன்தோட்டா துறைமுகக் குத்தகை ஒப்பந்ததை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.  இதனை புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பொருளியல் ஆலோசகர் அஜித் நிவார்ட் கேப்ரல் கூறியுள்ளார்.

தலைநகர் கொழும்புக்கு வெளியே உள்ள தமது இல்லத்தில் அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கான 99 ஆண்டு குத்தகைத் திட்டத்தைத் திரும்பப் பெற இருக்கிறோம்,” என்றார்.

முன்னதாக, தாம் வெற்றி பெற்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அதிபர் தேர்தல் வாக்குறுதியில் திரு கோத்தபய குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே 10 ஆண்டுகளாக பதவி வகித்தார். அவரது அரசில் கோத்தபய ராஜபக்சே தற்காப்புத் துறை செயலாளராக இருந்தார். அப்போது இவர்களது அரசு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தாகக்கூறப்பட்டது. இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்ட பணிகள் சீனாவுக்கு வழங்கப்பட்டன.

அவற்றுள் ஒன்றுதான் ஹம்பன்தோட்டா துறைமுகத் திட்டம். சீனாவைச் சேர்ந்த ‘சைனா மெர்சன்ண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி’ என்னும் நிறுவனத்துக்கு 1.1 பில்லியன் டாலர் (S$1.5 பில்லியன்) 99 ஆண்டு கால குத்தகைக்கு இத்துறைமுகத்தை வழங்க திட்டம் வகுக்கப்பட்டது. 

அப்போது ஆட்சிப்பொறுப்பில் இருந்த அதிபர் சிறிசேன இதற்கு ஒப்புதல் வழங்கினார். தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே 2017ஆம் ஆண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. துறைமுகத்தை போர்க்கப்பல்கள் நிறுத்தும் தளமாக சீனா மாற்றிவடும் என்றம் அதனால் தமது நாட்டிற்கு அது அச்சுறுத்தலைத் தரும் என்றும் கூறிய இந்திய அரசு, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது.

ஆனால் அதற்குப் பதில் கூறிய சீனா துறைமுக ஒப்பந்தம் மூலம் இலங்கை பொருளியல் வளரும் என்றது. இலங்கையும் துறைமுகப் பகுதியில் ராணுவத் தளம் அமைக்க சீனாவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வந்தது.