மின்னிலக்க விரிசலைத் தவிர்க்க திறன் மேம்பாடு

ஹெங்: சிங்கப்பூரர்களை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த அரசாங்கம் முயற்சி

அறிவார்ந்த தேசம் (ஸ்மார்ட் நேஷன்) என்னும் பயணத்தில் சிங்கப்பூரர்களை வழிநடத்திச் செல்ல பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார். இதனை நோக்கமாகக் கொண்டு ஊழியர் திறனை மேம்படுத்தவும் மின்னிலக்கப் பொருளியல் பற்றிய தகவலை ஊட்டவும் தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் அரசாங்கம் கைகோர்த்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டு முயற்சி சிங்கப்பூரர்களின் நிலைமையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு அவர்களை உயர்த்தவும் உதவும் என்றார் நிதி அமைச்சருமான திரு ஹெங்.

“இது நம் எல்லாரையும் உள்ளடக்கிய பயணம். இளையவரோ முதியவரோ அனைவரின் வாழ்க்கைச் சூழலையும் வேலைச் சூழலையும் தொழில்நுட்பம் மறுவடிவமைக்கிறது,” என்று நேற்று அவர் ‘ஸ்மார்ட் நேஷன் அண்ட் யு’ என்னும் நிகழ்வில் உரையாற்றியபோது குறிப்பிட்டார். டௌன்டவுன் ஈஸ்ட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய தொழிற்சங்கம் (என்டியுசி), அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவது பற்றிய அறிவிப்பை துணைப் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

“ஒன்றிணைந்து சிங்கப்பூர் முன்னேற்றம் காண்பது என்பது முக்கியவத்துவம் வாய்ந்தது. தொழில்நுட்பப் பயன்பாடு பற்றி தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் இடையிலான மின்னிலக்க விரிசல் உருவாகும் சாத்தியத்தைத் தணிக்க இந்த ஒன்றிணைப்பு உதவும்.

“துப்புரவுப் பணி, சாப்பாடு வழங்கும் சேவை போன்றவற்றில் இயந்திர மனிதர்களின் ஈடுபாடு, தானியக்க வாகனங்கள் போன்ற வியப்புக்குரிய சாத்தியங்களைத் தொழில்நுட்பம் வழங்கினாலும் அவற்றில் நாம் சமாளிக்க வேண்டிய ஆபத்துகளும் உள்ளன. தரவு பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது உள்ளிட்டவை அந்த ஆபத்துகளைச் சமாளிக்க உதவும்.

“தரவு பாதுகாப்பு நடைமுறையை மேம்படுத்தவும் தரவுகளை எவ்வாறு சிறப்பாக பாதுகாக்கலாம் என்று நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் சொல்லித் தரவும் அரசாங்கம் பணியாற்றி வருகிறது.

“இருந்தபோதிலும் அச்சுறுத்தல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் என்பதால் நாம் நமது கற்றலைத் தொடர வேண்டியது அவசியம்.

“புதிய தொழில்நுட்பங்கள் ஏராளமான வேலைகளையும் திறன் வளர்ப்புகளையும் வழங்கும் சாத்தியமும் உள்ளது. சிங்கப்பூரர்கள் காலத்திற்கேற்ற மாற்றங்களைக் கடைப்பிடிக்கத் தவறினால் அது அவர்களுக்குச் சிரமத்தைத் தரும். வேலைகளை இழக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.

“நாம் சமாளித்து ஆகவேண்டிய ஆபத்துகள் இவை என்றபோதிலும் தொழில்நுட்ப உலகிலிருந்து விலகிவிடக்கூடாது. அவ்வாறு ஒதுங்கிவிட்டால் உலகம் முன்னேற்றம் காணும்போது நாம் தொடர்பற்றுப்போய் விடுவோம். ஒன்றிணைந்து முன்னேற நாம் நமது சக்திக்குட்பட்ட ஒவ்வொன்றையும் ஈடுபடுத்த வேண்டும்,” என்று திரு ஹெங் கூறினார்.