மூத்த தொழிற்சங்கவாதி ஜி.முத்துகுமாரசாமி காலமானார்

மூத்த தொழிற்சங்கவாதி ஜி.முத்துகுமாரசாமி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 68. பொது நாட்சம்பள ஊழியர் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளராக அவர் இருந்தார்.

1992ஆம் ஆண்டில் இந்தச் சங்கம் அமைக்கப்பட்டது. அதே ஆண்டில் திரு முத்துகுமாரசாமி இதில் சேர்ந்தார். அப்போதைய பொதுப் பணித் துறையில் நாட்சம்பள ஊழியராக அவர் சேர்ந்தார்.

காலப்போக்கில் திறனை வளர்த்துக்கொண்ட அவர், மூத்த மின்சார தொழில்நுட்பரானார். அதே வேளையில், பொது நாட்சம்பள ஊழியர் இணைப்புச் சங்கத்தில் பதவிக்கு உயர்ந்த திரு முத்து

குமாரசாமி, 2002ஆம் ஆண்டில் அதன் பொதுச் செயலாளரானார்.

துப்புரவு, பழுதுபார்ப்பு உள்ளிட்ட பணிகளில் குறைந்த வருமானம் ஈட்டும் நாட்சம்பள ஊழியர்களின் உரிமைகளைத் தற்காக்க அவர் பெரும் முயற்சி எடுத்தார். பொது நாட்சம்பள ஊழியர் ஒருங்கிணைப்புச் சங்க உறுப்பினர்களில் பலர், அரசாங்க அமைப்புகளிலும் அரசு ஆணை பெற்ற கழகங்களிலும் பணியாற்றுகின்றனர். பொதுவாக அவர்கள் மாதச் சம்பளமாக $2,000க்கும் குறைவாக பெறுகின்றனர்.

திரு முத்துகுமாரசாமியின் மனைவிக்கு, தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவர் மேரி லியூவும் அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் எழுதிய இரங்கல் கடிதத்தில், கடந்த 27 ஆண்டுகளாக தொழிலாளர் இயக்கத்திற்கு திரு முத்துகுமாரசாமியின் பங்களிப்பு அளப்பரியது என்று குறிப்பிட்டனர்.

ஊழியர்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்த அவர்கள் கூடுதல் பயிற்சி பெறுவது முக்கியம் என்பதில் திரு முத்துகுமாரசாமி உறுதியாக இருந்ததை அக்கடிதம் சுட்டியது. அரசு ஆணை பெற்ற கழகங்களில் பணியாற்றும் நாட்சம்பள ஊழியர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியதாக அக்கடிதம் மேலும் குறிப்பிட்டது.

2008ஆம் ஆண்டில் நாட்சம்பள ஊழியர்களின் வேலைகள் மாற்றியமைக்கப்பட்டபோது அது தொடர்பாக தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் இணைந்து திரு முத்துகுமாரசாமி பணியாற்றினார்.

ஊழியர்களின் மேம்பாட்டிற்காக முதலாளிகள், அரசாங்கம் ஆகிய தரப்புடன் இணைந்து தொழிற்சங்கங்கள் பணியாற்ற அவர் ஊக்குவித்தார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவிடமிருந்து முத்தரப்புப் பங்காளித்துவத்திற்கான யோசனை கிடைத்ததாக 2015ஆம் ஆண்டில் அமரர் லீயின் மறைவுக்கு தாம் ஆற்றிய புகழுரையில் திரு முத்துகுமாரசாமி குறிப்பிட்டிருந்தார்.

திரு முத்துகுமாரசாமியின் மறைவு தமக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

“கடந்த அக்டோபரில் என்டியுசி பேராளர்கள் மாநாட்டில்தான் நான் அவரைச் சந்தித்தேன். சக்கர நாற்காலியில் இருந்த அவர், வழக்கம்போல உற்சாகமாக காணப்பட்டார்.

“ஒவ்வோர் ஊழியருக்கும் வேலை இருப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

“சகோதரர் குமார் கொண்டிருந்த இந்தக் கடப்பாட்டினாலேயே, சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கில் புகழுரையாற்ற நான் அவருக்கு அழைப்பு விடுத்தேன்.

“தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். எனினும், அவரது தலைசிறந்த பணியைப் பொது நாட்சம்பள ஊழியர் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் தலைமைத்துவம் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார் பிரதமர் லீ.

2017ஆம் ஆண்டில் அதிபர் ஹலிமா யாக்கோப்பிற்கான தேர்தல் குழுவில் திரு முத்துகுமாரசாமி இடம்பெற்றிருந்தார். குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களின் நலனுக்காக கடப்பாடு கொண்ட அவரை “ஒரு சிறந்த நண்பர்” என திருவாட்டி ஹலிமா வர்ணித்தார்.

நேற்று முன்தினம் திரு முத்துகுமாரசாமியின் கண்விழிப்புச் சடங்கிற்கு வருகை புரிந்தார் திருவாட்டி ஹலிமா. தொழிலாளர் இயக்கத்தில் தாம் சேவையாற்றியபோது திரு முத்துகுமாரசாமியைப் பல்லாண்டு காலமாக தமக்குத் தெரியும் என ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டார்.

அண்மைக்காலமாக திரு முத்து குமாரசாமிக்கு உடல்நலம் குன்றி இருந்ததைச் சுட்டிய அவர், “வலுவான, அர்ப்பணிப்பு கொண்ட ஒரு தலைவரைத் தொழிலாளர் இயக்கம் இழந்துவிட்டது. எனினும், அவருடைய பங்களிப்பு என்றும் நமது நினைவில் நிலைத்திருக்கும்,” என்றார்.

புளோக் 228 ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் திரு முத்துகுமார சாமியின் கண்விழிப்புச் சடங்கு நடைபெற்றது. மண்டாய் தகனச்சாலையில் அவரது உடல் நேற்று எரியூட்டப்பட்டது.

மனைவி ராஜமணி எஸ்.மாணிக்கம், இரு மகன்கள், இரு மகள்கள், நான்கு பேரப்பிள்ளைகள் ஆகியோரை திரு முத்துகுமாரசாமி விட்டுச் செல்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!