சிங்கப்பூருக்கு மூன்று தங்கப்பதக்கங்கள்

‘சீ கேம்ஸ்’ எனப்படும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் நேற்று ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது. முதல் தங்கம் ஆடவர்

களுக்கான வூஷு என்னும் தற்காப்புக் கலைப் போட்டியில் கிடைத்தது. 

அந்தப் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் யோங் யி சியாங் 9.70 புள்ளிகளைப் பெற்று முதலாவதாக வந்தார். மலேசியாவும் வியட்னாமும் அடுத்தடுத்த நிலைகளில் வென்றன.

சிங்கப்பூருக்கான அடுத்த தங்கம் பெண்கள் தரைப்பந்துப் போட்டியில் கிடைத்தது. சிங்கப்பூர் மகளிர் அணியினர் தாய்லாந்தை 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தினர்.

இறுதிப் போட்டி மிகவும் ‘திரில்’ ஆக முடிந்தது. நீண்ட நேரம் சமநிலையில் இருந்த ஆட்டம், முடியும் தறுவாயில் சிங்கப்பூர் பக்கம் திரும்பியது. போட்டி முடிய சுமார் ஐந்து நிமிடங்கள் இருந்தபோது இரு

தரப்பிலும் மாறி மாறி கோல்கள் விழுந்தன. 

இறுதிக்கட்டத்தில் ஜெரலீ ஓங் சிங்கப்பூருக்கான வெற்றி கோலைப் புகுத்தினார். இந்த வெற்றி மூலம் சிங்கப்பூர் அணி தங்கப்பதக்கத்தைக் தக்க வைத்துக்கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டு சீ விளையாட்டுகளில்  பெண்கள் தரைப் பந்துப் போட்டி அணி அறிமுகம் கண்டது. இறுதிப் போட்டியில் தாய்லாந்தை சிங்கப்பூர் வீழ்த்தி சாதனை படைத்தது. பதக்க வேட்டையை நேற்றுக் காலை வெள்ளிப் பதக்கத்துடன் சிங்கப்பூர் தொடங்கியது. பெண்களுக்கான நீர்ப் பந்து விளையாட்டில் இரண்டாவதாக வந்தது சிங்கப்பூர். இப்போட்டியில் தாய்லாந்துக்கு தங்கமும் பிலிப்பீன்ஸுக்கு வெண்கலமும் கிடைத்தன. 

சிங்கப்பூரின் மூன்றாவது தங்கப்பதக்கத்தை பனிச்சறுக்கு வீராங்கனை குளோ இங் பெற்றுத் தந்தார். அவர் மொத்தம் 152.67 புள்ளிகளுடன் முதலாவதாக வந்து தங்கம் வென்றார்.