பாலியல் கொடூரத்துக்கு எதிராகக் கொந்தளிப்பு

பெண் மருத்துவர் ஒருவர் தெலுங்கானாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் உடனடியாக நீதி வழங்க வலியுறுத்தி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.

ஹைதராபாத்தின் சாம்சாபாத்சுங்கச்சாவடி அருகே பிரியங்கா ரெட்டி, 26, எனப்படும் அந்த மருத்துவர், நால்வர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். கடந்த புதன்கிழமை இரவு நடந்த அச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரியங்காவின் இருசக்கர வாகன சக்கரத்தை ‘பஞ்சர்’ ஆக்கிவிட்டு அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து, கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக லாரி ஓட்டுநர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளில் ஒருவரான சி. சென்னகேசலுவின் தாயார் சியாமளா, தமது மகனைத் தூக்கில் போடுமாறு ஆவேசத்துடன் கூறினார். “அல்லது அந்தப் பெண்ணை எவ்வாறு எரித்தார்களோ அதேபோல எனது மகனையும் எரித்து விடுங்கள்,” என அந்தப் பெண் கூறினார்.

இதற்கிடையே, பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹைதராபாத்தில் உள்ள சில்குர் பாலாஜி கோயிலின் நடை 20 நிமிடங்களுக்குச் சாத்தப்பட்டது.

 பிரியங்காவின் வீட்டுக்குச் சென்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். “விரைவு நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவி வருகிறது.