சுவர் இடிந்து 17 பேர் பலி; உறவினர்கள் ஆர்ப்பாட்டம்; போலிஸ் தடியடி

கனமழை காரணமாக ஆறு மீட்டர் உயரமுள்ள பெரிய சுவர் ஒன்று வரிசையாக இருந்த நான்கு ஓட்டு வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 

இந்தத் துயரச் சம்பவம் கோயம்புத்தூரிலிருந்து கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்  மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் நேற்று அதிகாலை நிகழ்ந்தது.  

கட்டட உரிமையாளரைக் கைது செய்யக் கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைத் தடியடி நடத்தி விரட்டியடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விபத்தில் 17 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி ஜவுளிக்கடை உரிமையாளர், ஆறுமுகம் என்பவரின் சுற்றுச்சுவர் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் தான் அக்கம்பக்கத்து வீடுகள் இடிந்து விழுந்தன என்றும் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும், 17 பேரின் உறவினர்களும் கோரிக்கை விடுத்தனர்.

சுவர் இடிந்து விழுந்தபோது அந்த வீடுகளில் இருந்தவர்கள்  உறங்கிகொண்டிருந்ததாக அறியப்படுகிறது. குடியிருப்பின் பின்பக்கச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கி மாண்டவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர் என்று கோவை போலிசார் தெரிவித்தனர். மாண்டோரின் உடல்களைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 

4 குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியான  தகவல் கிடைத்ததும்  அவர்களது உறவினர்கள், கிராம மக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாண்டவர்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.  தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் நீலகிரி ஆகியவற்றில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் வேளையில் இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் வட்டாரத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கட்டடங்களும் சுவர்களும் அதிகாரிகளால் சரியாகப் பராமரிக்கப்படாததால் மழைக்காலங்களில் அவை இடிந்து விழுந்து உயிர்களைப் பறிப்பது வழக்கமானதாகிவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 

இதற்கிடையே, கிழக்குப் பருவமழை

தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெள்ளப் பாதிப்பால் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளி எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் நேற்று எட்டாவது நாளாகக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இரவு உணவுக்காக அறையில் இருந்த குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கக் கதவைத் தட்டிய நண்பர், மூவரும் நினைவிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். படங்கள்: ஷின் மின் நாளிதழ், பேங்காக் போஸ்ட்

13 Dec 2019

தாய்லாந்து விடுதியில் எரிவாயு கசிவு: நினைவிழந்த நிலையில் கிடந்த சிங்கப்பூர் குடும்பம்

இவ்வாண்டின் 11 மாதங்களில் 48 சம்பவங்களில் பாதி உள்ளிருந்து வெளியே தள்ளித் திறக்கப்படும் சன்னல்கள் தொடர்பானவை என்று தெரிவித்த இவ்விரு அமைப்புகள், இதற்கு முக்கிய காரணம் அவற்றின் துருபிடித்த ஆணிகளே என்பதையும் சுட்டின. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Dec 2019

பராமரிப்பு குறைபாட்டால் சன்னல் விழுந்தால் வீட்டு உரிமையாளருக்கு சிறை

காசோலைகள் எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன என்பது பற்றியும் இந்த இந்த மோசடி பற்றியும் நாதனுக்கு எதுவும் தெரியாது என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Dec 2019

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ மோசடியில் உதவிய மலேசிய இந்தியருக்கு 39 மாத சிறை