மின்-ஸ்கூட்டர், மின்-சைக்கிள் ஓட்டிகளுக்கு கட்டாயத் தேர்வு

பொது இடங்களில் மின்-ஸ்கூட்டர், மின் ஆற்றலில் இயங்கும் சைக்கிள் ஆகியவற்றை அனுமதிக்கும் பரிந்துரைகளை தனிநபர் நடமாட்டச் சாதன ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி மின்-ஸ்கூட்டர், மின் ஆற்றலில் இயங்கும் சைக்கிள்களை பொது இடங்களில் ஓட்டு வதற்கு முன்பு தேர்வு எழுத வேண்டும்.

மேலும் மின்-ஸ்கூட்டரை பயன்படுத்தி பணியில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு காப்புறுதி கட்டாயமாகிறது. 

பொது இடங்களில் மின்-ஸ்கூட்டரை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது 16. 

நடமாட்டச் சாதனங்களில் செல்லும்போது கைபேசியைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும்.

நடைபாதையில் பொதுமக்கள் இடதுபக்கமாகச் செல்ல வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள போக்குவரத்து அமைச்சு, புதிய நடத்தை விதிமுறைகள் எப்போது முதல் அமலாகும் என்பதைத் தெரிவிக்கவில்லை.

சாலை, நடைபாதை பாதுகாப்புகளை மேம்படுத்தும் தற்போதைய முயற்சிகளுக்கு புதிய பரிந்துரைகள் மேலும் வலு சேர்க்கிறது என்றும் பரிந்துரைகளைக் கவனமாக அமலாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது மேலும் கூறியது. 

புதிய நடத்தை விதிமுறைகள் பற்றி கருத்து தெரிவித்த அமைச்சு, நடைபாதைகளைப் பாதுகாப்பான முறைகளில் பகிர்ந்துகொள்ள பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கப்படும் என்று கூறியது.

“நடமாட்டச் சாதன ஓட்டுநர்களை நோக்கமாகக் கொண்ட தற்போதைய நடத்தை விதிமுறைகளில் பொதுமக்கள் பாதையை இடதுபக்கமாகப் பயன்படுத்துவதை ஊக்கமூட்டும் வழிகாட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சு குறிப்பிட்டது.

இதற்கிடையே போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் தனது ஃபேஸ்புக் பதிவில் சிரமமான அதே சமயத்தில் சமநிலையான பரிந்துரைகளை வெளியிட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களைப் பாராட்டியிருக்கிறார்.

தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ள வேளையில் கட்டாயத் தேர்வுக்கு குழு பரிந்துரை செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மின்-ஸ்கூட்டர் பயன்படுத்த அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதோடு தீவு முழுவதும் 440 கிலோ மீட்டர் சைக்கிள் பாதையில் மட்டுமே மின்-ஸ்கூட்டரை ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பொது இடங்களில் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு தனிநபர் நடமாட்டச் சாதன ஆலோசனைக் குழு பரிந்துரைகளை வெளியிட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity