சுடச் சுடச் செய்திகள்

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து

டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள அனாஜ் மண்டி பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

குடியிருப்பாளர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தீ மூண்டபோது அங்கு ஊழியர்களும் தொழிற்சாலை வேலையாட்களும் தூங்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 5.22 மணிக்குத் தீ குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து கிட்டத்தட்ட 30 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே குறுகலான சந்தில் நுழைந்து தீயை அணைக்க முடிந்தது.

கிட்டத்தட்ட நான்கு, ஐந்து மாடிக் கட்டடமான அத்தொழிற்சாலையிலிருந்து குறைந்தது 50 பேரை மீட்டதாக புதுடெல்லியின் துணை தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

சன்னல்களும், கதவுகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளே உறங்கிக்கொண்டிருந்தவர்கள் புகையை சுவாசித்து மூச்சுத் திணறியும் உடல் கருகியும் இறந்துள்ளதாக நம்பப்படுகிறது. 

நெருப்பு அணைக்கப்பட்டாலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் கூறினார். கட்டட இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீச்சம்பவம் ஏற்பட்ட சதார் பஸார் ஒரு வர்த்தக மையம். ஆனால் அங்கு மிகக் குறுகிய, நெரிசலான சந்துகள் உள்ளன. அத்துடன் போதுமான வெளிச்சமும் இல்லாத இவ்விடத்திற்குச் செல்வதே மிகச் சிக்கலான ஒன்றாக இருந்ததென அதிகாரிகள் கூறினர்.

கட்டடம் முழுவதும் பள்ளிப்பைகளும் பொட்டலப்படுத்தும் பொருட்களும் நிறைந்திருந்தன. ஆனால் தீப் பிடித்ததற்கான காரணத்தை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

தீ விபத்து பற்றி அறிந்து பாதிக்கப்பட்டோரின் உறவினர்களும் வட்டார வாசிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததால் எங்கும் அமளி நிலவியதாகக் கூறப்படுகிறது.  

இதற்கிடையே உதவிக்கரம் நீட்டுவதற்காக சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர். தீ விபத்து குறித்து பிரதமர் மோடி தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் சம்பவத்தால் தமக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் மோடி கூறியுள்ளார்.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீ விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார். தீ விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon