அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்திற்கு நேற்று காலை வந்த பயணிகளின் கவனத்தை இரு இயந்திர மனிதர்கள் ஈர்த்தன. ‘ஸ்டேஷன் கார்ட்’ எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, அந்த ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் அவை ஈடுபடுத்தப்பட்டன.
உள்ளூர் பாதுகாவல் நிறுவனமான ‘ஒன்பெர்ரி டெக்னாலஜிஸ்’ உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதர்களில் நுண்ணறிவுக் கண்காணிப்புக் கருவிகள், உணர்கருவிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திர மனிதர்
களுக்கு காணொளிப் பகுப்பாய்வு ஆற்றலும் உண்டு.
பொது இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் செயல்பாட்டு தயார்நிலையை உறுதி செய்யவும் நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இணைந்து ‘ஸ்டேஷன் கார்ட்’ பாதுகாப்பு நடவடிக்கையை நடத்தின.
அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இந்த இயந்திர மனிதர்கள், சந்தேகத்திற்குரிய பொருளோ நபரோ உள்ளனரா என்பதைச் சோதித்துப் பார்க்கும்.
போக்குவரத்து, தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, இவை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதை நேற்று பார்வையிட்டார்.
‘ஸ்டேஷன் கார்ட்’ பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பரிசோதனைக்கு பயணிகள் உட்படுத்தப்பட்டனர். இதில் அவர்களது உடைமைகளும் கதிரியக்க இயந்திரங்களில் பரிசோதிக்கப்பட்டன.
இத்தகைய இயந்திர மனிதர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது இது முதன்முறையல்ல. மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில் இவ்வாண்டு ஜூலையில் நடைபெற்ற அனைத்துலக போலிஸ் மாநாடு ஒன்றில் 10 இயந்திர மனிதர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இத்தகைய இயந்திர மனிதர்கள் நியூட்டன், ஹாலந்து வில்லேஜ், ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட், ஹார்பர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையங்களில் முன்னதாக பரிசோதிக்கப்பட்டிருந்தன.
ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில், ‘எஸ்டி என்ஜினியரிங்’ நிறுவனம் உருவாக்கிய மனித இயந்திரம் ஒன்றை நிலப் போக்குவரத்து ஆணையம் பணியில் ஈடுபடுத்தியது. கிட்டத்தட்ட 1.6 மீட்டர் உயரம் கொண்ட அந்த இயந்திர மனிதரில் ஏழு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தைப் பாதுகாவல் அதிகாரிகள் தொலைவிலிருந்து கண்காணிக்க உதவுவதில் நுண்ணறிவு கண்காணிப்புக் கருவிகள், காணொளிப் பகுப்பாய்வு ஆகிய வசதிகளை இயந்திர மனிதர்கள் நேற்று பயன்
படுத்தின.