சிராங்கூன் வட்டாரத்தில் 2025ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படவுள்ள புதிய பலதுறை மருந்தகம், ‘நெக்ஸ்’ கடைத்தொகுதிக்கும் சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்திற்கும் எதிரே அமையும் என மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சியா கியான் பெங் நேற்று முன்தினம் கூறினார்.
என்டியுசி ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியான திரு சியா, இந்தப் பலதுறை மருந்தகம் சிங்கப்பூரின் ஆகப் பெரியதாக அமையும் என்றார்.
தரை பரப்பளவின்படி, இந்த பலதுறை மருந்தகம் நாட்டின் ஆகப் பெரியதாக இருக்கும் என்பதைச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. எனினும், இது தொடர்பாக மேல் விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கடுமையான நோய், நாட்பட்ட நோய் ஆகியவற்றுக்குச் சிகிச்சை வழங்குவதுடன், குழந்தைப்பருவ வளர்ச்சியை மதிப்பிடுவது, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதல், மகளிருக்கான புற்றுநோய் பரிசோதனை, சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் நோய்த்
தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பலதரப்பட்ட ஏற்பாடுகளை இந்தப் பலதுறை மருந்தகம் வழங்கும் என திரு சியா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
சிராங்கூன் சென்ட்ரல், அப்பர் சிராங்கூன் ரோடு ஆகியவற்றின் சந்திப்பில் பலதுறை மருந்தகம் அமையும் என்றார் அவர்.
எதிர்வரும் ஆண்டுகளில் திறக்கப்படவுள்ள 10 முதல் 12 புதிய பலதுறை மருந்தகங்களில் இதுவும் ஒன்று.
புக்கிட் பாஞ்சாங், யூனோஸ், காலாங், செம்பவாங், காத்திப், தெம்பனிஸ் நார்த், இயூ டீ உள்ளிட்ட பகுதிகளிலும் பலதுறை மருந்தகங்கள் எதிர்காலத்தில் செயல்படவுள்ளன.
சிங்கப்பூரில் தற்போது 20ஆக உள்ள பலதுறை மருந்தகங்களின் எண்ணிக்கையை 2030ஆம் ஆண்டிற்குள் 30-32ஆக அதிகரிக்க திட்டங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.
காக்கி புக்கிட், தெங்கா ஆகிய வட்டாரங்களில் இரு புதிய பலதுறை மருந்தகங்கள் 2025ஆம் ஆண்டிற்குள் திறக்கப்படும் என கடந்த மாத இறுதியில் அமைச்சு கூறியிருந்தது.
மக்கள்தொகை மூப்படைந்து வரும் வேளையில், நாட்பட்ட நோய் உடையோருக்குப் பராமரிப்பு வழங்குவது முக்கியம் என சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் கடந்த மாதம் சமூக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity