குடியுரிமை மசோதா: அமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் கோரிக்கை

குடியுரிமை மசோதா: அமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் கோரிக்கை

1 mins read
70a5a71f-736e-4946-ba65-16f75735bae3
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநில, கௌஹாத்தி நகரில் டயர்களை எரித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள். படம்: ஏபி -
Google News Preferred Icon

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்ததையடுத்து, அவருக்கு எதிராக அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக சமய சுதந்திரத்துக்கான ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகளிலிருந்து சமயப் பிரச்சினை காரணமாக, இந்தியாவிற்கு அகதிகளாக இடம் பெயரும் மக்கள் அங்கு குடியுரிமை பெற முடியும். அந்நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்த சமயத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெறமுடியும்.

ஆனால், இந்த மசோதா இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது. இதனால் இந்த மசோதா கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால் அமைச்சர் அமித் ஷாவிற்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்துலக சமய சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்டை நாடுகளில் சமய ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம் பெயர்ந்தவர்கள் பட்டியலில், இந்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சமய அடிப்படையில் சிலருக்கு குடியுரிமை கிடைக்கவோ, மறுக்கவோ வகை செய்யும் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்துள்ளன.