2020 நவம்பருக்குப் பிறகு பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன்'

2020 நவம்பருக்குப் பிறகு பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன்'

2 mins read
483d0045-af6c-48bb-90fc-b0f8d1ff0a9c
போர்ட் டிக்சனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரு அன்வாருடன் கை குலுக்கும் டாக்டர் மகாதீர் (இடது). படம்: பெர்னாமா -

மலேசிய பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க இருப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது உறுதியளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாடு (ஏபெக்) முடிவடைந்த பிறகு பிரதமர் பதவியைத் திரு அன்வாரிடம் ஒப்படைக்கத் தாம் தயார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் 94 வயதான டாக்டர் மகாதீர் கூறினார்.

ஏபெக் மாநாட்டுக்கு முன்பு பதவி மாற்றம் செய்யப்பட்டால் அது இடையூறாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், "அன்வாரிடம் பதவியை ஒப்படைக்க நான் உறுதியளித்துள்ளேன்; அதனைச் செய்வேன்," என்று கூறியுள்ளார் டாக்டர் மகாதீர்.

"நான் அவரிடம் பதவியை ஒப்படைப்பேன். நாட்டு மக்கள் அவரை விரும்பவில்லை என்றால் அது அவர்கள்பாடு. எந்த விதமான குற்றச்சாட்டு அவர் மீது இருந்தாலும் எனது உறுதிமொழியை நான் செயல்படுத்துவேன்," என்றார் அவர்.

அப்படியானால், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பதவியை ஒப்படைப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, "நேரம் வரும்போது அதைக் கவனிப்போம்," என்று பதிலளித்தார் டாக்டர் மகாதீர்.

உலகின் 'ஆக வயதான' பிரதமர் என்ற பெருமையுடன் வலம் வரும் டாக்டர் மகாதீர், இரண்டாவது முறையாக ஏபெக் மாநாட்டை நடத்திய பிரதமர் என்ற பெயரையும் பெற விரும்புகிறார் என்று கூறப்படும் வேளையில், "என்னுடைய வேலையில் திருப்தி இருப்பதால் நான் சோர்வடைவதில்லை. உணவு சுவையாக உள்ளது என்பதற்காக நான் அதிகம் சாப்பிடுவதில்லை. எளிய உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறேன்," என்று தமது நல்வாழ்வு ரகசியத்தையும் நேர்காணலின்போது வெளியிட்டார்.