சுடச் சுடச் செய்திகள்

ரத்த வங்கியில் கையிருப்பு குறைந்தது; 3,000 நன்கொடையாளர்கள் தேவை

சிங்கப்பூரில் பலவகையான பிரிவுகளில் உள்ள ரத்த கையிருப்பு குறைந்துள்ளது. 

3,000க்கும் அதிகமாக பல்வேறு ரத்தப் பிரிவினரைச் சேர்ந்த ரத்த நன்கொடையாளர்கள் தேவை என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஓ வகை ரத்தக் கையிருப்பின் அளவு பாதியாகக் குறைந்துள்ளது. சிங்கப்பூரின் 50 விழுக்காடு நோயாளிகளுக்கு ரத்தமேற்ற ஓ வகை ரத்தமே தேவைப்படுகிறது. ஏ, பி வகை ரத்த சேமிப்பும் குறைந்துள்ளது.

ஓ வகையில் 1,500 ரத்த நன்கொடையாளர்களும், ஏ வகையில் 750, பி வகையில் 750 ரத்த நன்கொடையாளர்களும் அடுத்த மூன்று வாரங்களில் தேவைப்படுகின்றனர்.

ஓ வகை ரத்தமே அவசரமாகத் தேவைப்படுகிறது. ஓ வகை ரத்தம் எல்லா மற்ற ரத்த வகைகளுக்கும் ஒத்துப்போகும் என்பதால், அவசர சிகிச்சையின்போது நோயாளியின் ரத்தப் பிரிவு தெரியாத நிலையில் ஓ வகை ரத்தமே ஏற்றப்படுகிறது. அதனால் இந்த வகை ரத்தத்தின் தேவை அதிகமாக உள்ளது.

உடல் நலமுடன் இருக்கும் 16 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட, குறைந்தது 45 கிலோ கிராம் எடையுள்ள, ஓ, ஏ, பி வகைகளைச் சேர்ந்த ரத்தங்களைக் கொண்டிருப்பவர்கள் ரத்த நன்கொடையளிக்கலாம்.

ஊட்ரம் சுகாதார அறிவியல் ஆணைய ரத்த வங்கி, டோபி காட்டிலுள்ள ரத்த வங்கி, உட்லண்ட்சிலுள்ள ரத்த வங்கி, வெஸ்ட்கேட் டவரில் உள்ள ரத்த வங்கி ஆகிய இடங்களில் நேரடியாகச் சென்று ரத்ததானம் வழங்கலாம். 

சமூக ரத்த நன்கொடை முகாம்களிலும் சென்று ரத்தம் வழங்கலாம். ரத்த நன்கொடை முகாம்கள் பற்றித் தெரிந்துகொள்ள  www.redcross.sg/donateblood என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.

ரத்த நன்கொடை செய்வதற்கு முதல் நாள், சிற்றுண்டியே உண்ண வேண்டும். அதிகம் பானங்களை அருந்த வேண்டும். நன்கு தூங்கி நல்ல ஓய்வெடுக்க வேண்டும்.

ரத்தம் நன்கொடை வழங்குவோர் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும். 16, 17 வயதுகளில் இருப்போர் பெற்றோரின் அனுமதியைக் குறிக்கும் கையொப்பமிட்ட கடிதத்தை உடன் கொண்டு வரவேண்டும்.  இந்தக் கடிதத்தை ஊட்ரம் சுகாதார அறிவியல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

மேல் விவரங்களுக்கு donate.blood@redcross.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம். 6220 0183 என்ற தொலைபேசி எண்ணில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon