சுடச் சுடச் செய்திகள்

துவாஸில் வெடிப்புகளுடன் வேகமாகப் பரவிய தீ

துவாஸில் நேற்றுக் காலை மூண்ட பெருந்தீயில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன.  48 துவாஸ் கிரசென்ட்டில் உள்ள தொழிற்பேட்டையின் கழிவு நிர்வாகத் தளத்தில் காலை 6 மணியளவில் பற்றிய தீயை அணைக்க கிட்டத்தட்ட 130 தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடினார்கள். 

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (எஸ்சிடிஎஃப்) 34 அவசர வாகனங்கள் விரைந்து சென்று உதவின. யுனிஃபைன் ஸ்டார் பெட்ரோகெமிக்கல் என்னும் தொழிற்சாலையில் மூண்ட தீ மளமளவென பரவியதால் கிட்டத்தட்ட ஒரு காற்பந்துத் திடல் அளவுக்கு எங்கு பார்த்தாலும் தீயும் கரும்புகையுமாக காணப்பட்டன.

அழைப்பு விடுக்கப்பட்ட நான்கு நிமிடங்களில் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக படையின் பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். காலை 10 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பகல் 12 மணியளவில் முற்றாக அணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அதன் பிறகு, புகைந்துகொண்டு இருந்த பாகங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 

ஆளில்லா இயந்திரங்கள் மூன்று தீயணைப்புக்குப் பயன்

படுத்தப்பட்டன. எண்ணெய், ரசாயனம் போன்ற நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை நிர்வகிப்பதில் யுனிஃபைன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ரசாயனக் கழிவுகள் ஓடும் கால்வாய்கள் வழியாக தீ வேகமாகப் பரவியதாகவும் அப்போது பல வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் எஸ்சிடிஎஃப் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.