சுடச் சுடச் செய்திகள்

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ மோசடியில் உதவிய மலேசிய இந்தியருக்கு 39 மாத சிறை

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ மோசடியில் தொடர்புடைய நாதன் முனியாண்டி எனும் 50 வயதான முன்னாள் பாதுகாவல் அதிகாரிக்கு மூன்றாண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ எனும் வாழ்நாள் கல்வியை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் $3.15 மில்லியன் தொகையை மோசடி செய்ய நாதன் முனியாண்டி எனும் மலேசிய ஆடவர் உதவி செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

மொத்த தொகையான $3.15 மில்லியனில் $900,000ஐ மோசடி செய்ய உதவியதாக ஆறு குற்றச்சாட்டுகளை நாதன் ஒப்புக்கொண்டார்.

எஞ்சியுள்ள தொகைக்கான இதேபோன்ற வேறு 15 குற்றச்சாட்டுகளும் தீர்ப்பின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

தங்களது ஊழியர்களை பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிக்கு அனுப்பும் நிறுவனங்கள், சில நிபந்தனைகளுக்குட்பட்டு, அந்தப் பயிற்சிக்காக செலவிட்ட தொகையில் மானியம் கோரி ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறையைப் பொறுத்து அந்த மானியத் தொகை ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கோ அல்லது பயிற்சி நிறுவனங்களுக்கோ வழங்கப்படும்.

மூன்று பயிற்சி நிறுவனங்கள், ஆறு வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை இணைந்து 2017ஆம் ஆண்டு மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 8,386 மோசடி விண்ணப்பங்களையும் 8,391 மானியக் கோரிக்கைகளையும் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்   சிங்கப்பூர்’ அலுவலகத்துக்கு சமர்ப்பித்தன.  ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்   சிங்கப்பூர்’ அலுவலகம் இந்த நிறுவனங்களுக்கு $39.9 மில்லியன் தொகையை வழங்கியது.

கடந்த 2014ஆம் ஆண்டு வின்சன்ட் பீட்டர் என்பவருடன் நாதனுக்கு நட்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வின்சன்டின்  வீட்டுக்கு நாதன் குடிபெயர்ந்தார். சிங்கப்பூரில் நாதனின் குடும்பம் வசிக்கவில்லை.

ரொக்க காசோலைகளைப் பணமாக மாற்றிக் கொடுத்தால்  பணம் தருவதாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி கூறினார் வின்சென்ட். ஏற்கெனவே பணத் தேவை இருந்த நாதன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.

வின்சென்டும் நாதனும் இணைந்து அடுத்த நான்கு நாட்கள் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் மேபேங்க், ஓசிபிசி ஆகிய இரு வங்கிகளுக்கும் சென்று ரொக்க காசோலைகளைப் பணமாக மாற்றினர்.

வின்சென்ட் கொடுக்கும் ரொக்க காசோலைகளைப் பணமாக மாற்றும் வேலை நாதனுக்கு வழங்கப்பட்டது. காசோலை வழங்கப்பட்ட நிறுவனங்களில் தாம் பணிபுரிவதாக நாதன் வங்கிகளில் பொய் சொல்லி அவற்றைப் பணமாக மாற்றினார்.

பின்னர், அந்தப் பணத்தை வின்சென்டிடம் நாதன் ஒப்படைத்தார். ஆனால், காசோலைகள் எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன என்பது பற்றியும் இந்த இந்த மோசடி பற்றியும் நாதனுக்கு எதுவும் தெரியாது என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

நாதனைத் தவிர மாணிக்கம் பிரகாசம் எனும் முன்னாள் துப்புரவாளரும் $1 மில்லியனுக்கும் அதிகமான ரொக்க காசோலையைப் பணமாக மாற்ற உதவினார் என்று கூறப்பட்டது. மாணிக்கத்துக்கு ஈராண்டுகள் மற்றும் ஒன்பது மாத சிறைத் தண்டனை இந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டது.

கடந்த மாதம் வின்சென்டுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களுக்கு  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த மோசடி கும்பலின் மற்ற உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity