சுடச் சுடச் செய்திகள்

பராமரிப்பு குறைபாட்டால் சன்னல் விழுந்தால் வீட்டு உரிமையாளருக்கு சிறை

பராமரிப்புக் குறைபாடே கட்டடங்களிலிருந்து சன்னல்கள் விழுவதற்கு முக்கிய காரணம் என்று கட்டட, கட்டுமான ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் தெரிவித்துள்ளன.

இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை உயரத்திலிருந்து விழும் சன்னல் தொடர்பான 48 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஆண்டு முழுவதும் சன்னல் விழும் 49 சம்பவங்கள் நிகழ்ந்தன. 

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சன்னல்களைச் சோதித்து பராமரிக்க வேண்டும் என்று  சம்பந்தப்பட்ட அமைப்புகள் அடிக்கடி நினைவூட்டிய பிறகும் இத்தனை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று சுட்டிக் காட்டப்பட்டது.

சன்னல்களுக்குப் போதிய அளவு பராமரிப்பு கொடுக்கப்படவில்லை என்றால் அது விழுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது என்று தெரிவித்த இவ்விரு அமைப்புகள், பராமரிப்பு குறைபாட்டால் தான் சன்னல் விழுந்துள்ளது 
என்று நிரூபிக்கப்பட்டால், வீட்டு உரிமையாளர்களுக்கு $10,000 வரை அபராதம், ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றன.

2017ம் ஆண்டு முழுவதிலும் 56 சம்பவங்கள், 2016ல் 45 சம்பவங் கள், 2015ல் 35 சம்பவங்கள் என புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. 2015ஆம் ஆண்டில்தான் ஆகக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்தன.

“அதிக பயன்பாட்டின் காரணமாக சன்னல்களின் பாகங்கள் நாளடைவில் பழுதடைந்துபோகக் கூடும்,” என்று கூட்டாகத் தெரிவித்த கட்டுமான ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும், சன்னல்கள் அடிக்கடி சோதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

“சிங்கப்பூரில் அதிக அளவிலான உயர்மாடிக் கட்டடங்கள் இருப்பதால், உயரத்திலிருந்து விழும் சன்னல்களால் ஆபத்து அதிகம்,” என்று கூறினார் கட்டட, கட்டுமான ஆணையத்தின் அமலாக்க, கட்டமைப்பு சோதனைப் பிரிவின் இயக்குநர் திரு லிம் பெங் குவி. 

இவ்வாண்டின் 11 மாதங்களில் 48 சம்பவங்களில் பாதி உள்ளிருந்து வெளியே தள்ளித் திறக்கப்படும் சன்னல்கள் தொடர்பானவை என்று தெரிவித்த இவ்விரு அமைப்புகள், இதற்கு முக்கிய காரணம் அவற்றின் துருபிடித்த ஆணிகளே என்பதையும் சுட்டின.

2004ஆம் ஆண்டு முதல், சன்னல்களின் அலுமினியம் ஆணிகள் துருபிடிக்காக இரும்பு ஆணிகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பது சட்டபூர்வ விதியாக உள்ளது.

இந்த விதிமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு ஆறு மாதம் வரையிலான சிறை, $5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும்  விதிக்கப்படலாம்.

சன்னல் விழும் சம்பவங்களில் 19 சறுக்கும் சன்னல்கள் தொடர்பானவை என்றும் ஐந்து சம்பவங்கள் இதர வகை சன்னல்கள் தொடர்பானவை என்றும் கூறப்பட்டது.

2006ஆம் ஆண்டு முதல் இது வரை சன்னல் தொடர்பான சம்பவங்களுக்காக 352 பேருக்கு அபராதமும் 92 பேர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity