தெம்பனிஸ் கட்டுமானத் தளத்தில் இன்று (டிசம்பர் 17) காலை அகழ்பொறி (நிலம் அகழும் இயந்திரம்) ஒன்று கவிழ்ந்ததில் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவரின் கால் சிக்கிக்கொண்டது.
அதிலிருந்து மீட்கப்பட்ட அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தெம்பனிஸ் அவென்யூ 9ல் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கை பற்றி இன்று காலை 11.10 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) ‘ஸ்டோம்ப்’ செய்தி இணையத்தளத்திடம் தெரிவித்தது.
எஸ்சிடிஎஃப் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது ஊழியர் ஒருவரின் கால், கீழே விழுந்த அகழ்பொறியின் அடியில் சிக்கியிருந்தது.
துணை மருத்துவ அதிகாரிகள் அவருக்கு முதலுதவி அளித்த வேளையில் மற்றோர் அகழ்பொறியின் உதவியால் கீழே விழுந்த எந்திரம் தூக்கப்பட்டது என்று எஸ்சிடிஎஃப் குறிப்பிட்டது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஊழியர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அனானிமஸ் எனும் ‘ஸ்டோம்ப்’ வாசகர் அனுப்பிய புகைப்படங்களில் மஞ்சள் வண்ண அகழ்பொறியின் கீழே ஆடவர் ஒருவரின் கால் சிக்கியிருப்பதும் சில ஊழியர்கள் அங்கு நின்றிருப்பதும் தெரிந்தது.
கவிழ்ந்த மஞ்சள் வண்ண அகழ்பொறியைத் தூக்கிய ஆரஞ்சு வண்ண அகழ்பொறியும் அங்கு காணப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட மனிதவள அமைச்சு, “பாரந்தூக்கும் நடவடிக்கை ஒன்றின்போது கவிழ்ந்த அகழ்பொறி, ஊழியர் ஒருவரின் இடது காலைக் காயப்படுத்தியது,” என்று குறிப்பிட்டது.
அந்தக் கட்டுமானத் தளத்தின் மேம்பாட்டாளர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் எனவும் அதன் ஒப்பந்ததாரர் ஹுவாஷங் கான்ட்ராக்டர் பிரைவேட் லிமிடெட் எனவும் குறிப்பிட்ட அமைச்சு, காயமடைந்தவர் ‘டிரில் ஜெம்ஸ் எஞ்சினியரிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் ஊழியர் என்றும் தெரிவித்தது.
அந்தக் கட்டுமானத் தளத்தில் அனைத்துவிதமான அகழ்பொறி செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணை நடைபெறுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity