இந்தோனீசியாவின் பாலித் தீவுக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டின்பேரில் சிங்கப்பூரர் ஒருவர் உட்பட ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பெண், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆடவர் ஆடவர், தாய்லாந்தைச் சேர்ந்த ஆடவர், சிலி நாட்டைச் சேர்ந்த ஆடவர், ஹாங்காங் ஆடவர்கள் இருவர் என் மொத்தம் ஆறு பேர் ஆரஞ்சு வண்ண தடுப்புக் காவல் உடைகளில் கொண்டு செல்லப்பட்டதை பாலியின் தலைநகர் டென்பசாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் காண முடிந்தது. அவர்களது கைகள், கால்கள் பிணைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆறு பேரும் கடந்த ஒரு மாதக் காலத்தில் பாலி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது தனித்தனியாக பிடிபட்டதாக பாலியின் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏறத்தாழ 30 கிலோ கஞ்சாவை தனது உடைமைகளுக்குள் வைத்திருந்த சுவிட்சர்லாந்து ஆடவர் கடந்த மாதம் 4ஆம் தேதி கைதானார் என்று கூறப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களில் 17.76 கிராம் கஞ்சாவை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தாய்லாந்து ஆடவர் பிடிபட்டார்.
0.35 கிராம் கொக்கேன் எனும் போதைப்பொருளை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் சுற்றி கடப்பிதழுக்குள் வைத்திருந்த சிங்கப்பூர் பெண்ணை இந்தோனீசிய குடிநுழைவு அதிகாரி கடந்த மாதம் 14ஆம் தேதி பிடித்தார்.
அதற்கடுத்த இரு வாரங்களில் 77.26 கிராம் எடையுள்ள திரவ மெதாம்ஃபீட்டமைனைத் தனது பயணப் பெட்டிக்குள் வைத்திருந்த சிலி நாட்டு ஆடவர் பிடிபட்டார்.
இம்மாதம் 4ஆம் தேதி 3.2 கிலோ எடையுள்ள படிக மெதாம்ஃபீட்டமைனைப் பயணப் பெட்டிக்குள் வைத்திருந்த ஹாங்காங் ஆடவர் சிக்கினார்.
கடந்த வாரம் 4 கிலோ படிக மெதாம்ஃபீட்டமைனை வளர்ப்புப் பிராணி உணவுப் பொட்டலத்துக்குள் மறைத்து வைத்துக் கடத்திய 19 வயதான மற்றொரு ஹாங்காங் ஆடவரும் பிடிபட்டார்.
போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக மிகவும் கடுமையான சட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ள இந்தோனீசியாவில் சில நேரங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் உண்டு.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 150க்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோர் போதைப்பொருள் குற்றவாளிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.