இந்திய அரசு சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
“குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வன்
முறையாக மாறியதையடுத்து, நிலைமையை ஆராய மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பிரதமர் பேசினார்,” என பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோசம் அடைந்து வரும் மோதல்களில் நாடு முழுவதும் எட்டு வயது சிறுவன் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலையிலும் நேற்றும் பல மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்ந்தன.
வன்முறை வெடித்ததால் போலிசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.
போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் குறிவைத்து தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என போலிசார் கூறினர்.
இந்நிலையில், குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களைக் காட்டும் படங்கள், காணொளிகளை ஒளி
பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தொலைக்காட்சி ஒளிவழிகளுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“நாட்டில் சட்ட, ஒழுங்கு நிலைநாட்டப்படுவதற்குப் பங்கம் விளைவிக்கும், அல்லது அரசாங்கத்திற்கு எதிரான செயல்பாடுகளைத் தூண்டும் தகவல்களைக் காட்டுவதை ஒளிபரப்பு நிலையங்கள் தவிர்க்க வேண்டும்,” என இந்திய அரசு விரும்புவதாக அந்நாட்டின் தகவல், ஒளிபரப்பு அமைச்சு வெளியிட்ட கடிதம் கூறுகிறது.
இம்மாதம் 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்வதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தெரியவில்லை.