ஸ்டாலின்: போராட்டம் தொடரும்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை இந்திய அரசு திரும்பப் பெறும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் நிறைவேற்றியது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியாவின் பல பகுதிகளிலும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாகப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் சேர்ந்து திமுக சென்னையில் நேற்று எதிர்ப்புப் பேரணியை நடத்தியது.

பேரணியின் முடிவில் மேடை ஏறிப் பேசிய ஸ்டாலின், “இந்தப் பேரணி, அனைவரும் ஓரணியில் நின்ற பேரணி மட்டுமல்ல, போர் அணியாகவே நடந்திருக்கிறது. இந்த மாபெரும் எழுச்சியின் மூலம் ‘குழிபறிக்கும் குடியுரிமைச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள்’ என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.

“இன்று தொடங்கிய எங்களின் போராட்டம் இத்துடன் நின்று விடாது. ஜனநாயகத்தை, சமத்துவத்தை, சமயச் சார்பின்மையை, தமிழர்களைக் காக்கின்ற இந்த தீரம் மிக்க போர், சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரை தொடரும்,” என்று அவர் முழங்கினார்.

முன்னதாக, திமுக பேரணிக்கு அனுமதியளிக்க போலிஸ் மறுத்துவிட்டது. இதனால், பேரணிக்குத் தடை விதிக்கவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பேரணிக்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதே நேரத்தில், பேரணியை அமைதியாக நடத்த வேண்டியது தலைவர்களின் பொறுப்பு என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, 5,000 போலிசார் பாதுகாப்புடன் 110 கண்காணிப்பு கேமராக்களும் நான்கு ஆளில்லா வானூர்திகளும் கண்காணித்த படி பேரணி நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு, தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

கிட்டத்தட்ட 40,000 முதல் 50,000 பேர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டதாக மூத்த போலிஸ் அதிகாரி ஒருவரைச் சுட்டி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, “பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வெறுப்புணர்வு, வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள மாணவர்களும் இளையர்களும் திரளவேண்டும்,” என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

பெங்களூரில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு, குடியுரிமை சட்டத் திருத்தம், அடுத்த வரவுள்ளதாகக் கூறப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்குத் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

இதனிடையே, குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம் என்று ஊடகங்களில் மேற்கு வங்க அரசு விளம்பரம் செய்வதற்கு கோல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!