வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் 930,000 குடும்பங்கள் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச் சீட்டுகளை இந்த மாதம் பெறும்.
தங்கியிருக்கும் வீடுகளின் அளவைப் பொறுத்து அவர்கள் $100 வரை வரையிலான ‘யுட்டிலிட்டீஸ் - சேவ் (யூ-சேவ்)’ எனப்படும் பயனீட்டுக் கட்டணக் கழிவைப் பெறுவர் என நிதி அமைச்சு இன்று (ஜனவரி 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போர் $100க்கான பற்றுச்சீட்டுகளையும் மூவறை வீடுகளில் வசிப்போர் $90க்கான பற்றுச்சீட்டுகளையும் பெறுவர்.
நான்கறை வீடுகளில் வசிப்போருக்கு $80, ஐந்தறை வீடுகளில் வசிப்போருக்கு $70, எக்சிகியூட்டிவ் அல்லது பல தலைமுறை வீடுகளில் வசிப்போருக்கு $60 என பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை வைத்திருப்போரின் குடும்பங்கள் இந்தப் பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெறமாட்டா.
தகுதி பெறும் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கொரு முறை இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை இந்த வகையில் அரசாங்கத்துக்கு சுமார் $300 மில்லியன் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பற்றுச்சீட்டுகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 66717117 என்ற எண்ணை அழைக்கலாம். அல்லது customersupport@spgroup.com.sg என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity