சிங்கப்பூரின் எதிர்காலத்திற்குக் கல்வி மிக முக்கியம் என்றும் ஒவ்வொரு மாணவரிடமும் ஒளிந்துள்ள திறமையை வெளிக்கொணரும் வகையில் கல்வி முறை வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
கட்டணத்தைக் காரணம் காட்டி எந்த ஒரு சிங்கப்பூரருக்கும் கல்வி மறுக்கப்படக்கூடாது என்ற பிரதமர், அதனால்தான் கல்வி எப்போதும் அனைவருக்கும் கட்டுப்படியாகும் வகையில் வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரர்களைப் பொறுத்தமட்டில், கல்வி மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்வியின் மூலம் நம் மக்கள் அறிவையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ள முடியும்; நல்ல மனிதர்களாகத் திகழ முடியும்; தங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிவதோடு பிறருக்கும் பயன்படும்படியாக வாழலாம்,” என்றார் திரு லீ.
டெக் கீயில் கடந்த வார இறுதியில் நடந்த கல்வி உதவி விருதுகள் வழங்கும் இரு நிகழ்ச்சிகளில் திரு லீ பங்கேற்றார்.
டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் கல்வி உதவி விருதுகள் 351 மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் எடுசேவ் கல்வி உதவி விருதுகள் 760 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. குடும்ப வருமானம், பள்ளி முதல்வர்களின் பரிந்துரைகள், கல்வித் தேர்ச்சிகள், நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் கல்வி உதவி விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த விருதுகளைப் பெற்ற மாணவர்களுக்கு $250 முதல் $550 வரை உதவித் தொகை கிடைத்தது.
எடுசேவ் கல்வி உதவி விருது பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் $200 முதல் $500 வரை வழங்கப்பட்டது.
இந்தக் கல்வி உதவி விருதுகளுக்கான நிதியை அடித்தள அமைப்புகள் திரட்டின.
மாணவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் என்றும் கல்வி முறை கட்டுப்படியாகவும் அதேவேளையில் தரமிக்கதாகவும் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்றும் பிரதமர் லீ, தமது உரையின்போது குறிப்பிட்டார்.
பாலர் பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் இந்த ஆண்டில் கல்விக் கட்டணம் குறைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.