அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் புரட்சிப் படைத் தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 56 பேர் உயிரிழந்தனர்.
சுலைமானியின் சொந்த ஊரான கெர்மானில் நேற்று இடம்பெற்ற இந்த ஊர்வலத்தின்போது மேலும் 48 பேர் காயமுற்றனர் என்று ஈரானின் அதிகாரபூர்வ ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ‘பிரஸ் டிவி’ டுவிட்டர் மூலம் தெரிவித்தது.
சுலைமானியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்படவிருந்ததை அடுத்து அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள கெர்மான் நகர வீதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்நிலையில், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதற்கும் பலரும் மிதிபட்டு மாண்டதற்கும் என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஆளில்லா வானூர்தி மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அமைச்சருக்கு விசா மறுப்பு
நியூயார்க்கில் நாளை நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கு செல்லவிருந்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸாரிஃபுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துவிட்டது என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐநாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தூதர்களுக்கு 1947 ஐநா தலைமையக உடன்பாட்டின்கீழ் அமெரிக்கா விசா வழங்கவேண்டும்.
ஆனால், ‘பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை, பயங்கரவாதம்’ ஆகிய காரணங்களுக்காக விசா வழங்காமல் நிராகரிக்க தனக்கு உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது. இதுபற்றிக் கருத்துக் கூற அமெரிக்க உள்துறை அமைச்சு மறுத்துவிட்டது.
அதேபோல, வெளியுறவு அமைச்சர் ஸாரிஃபுக்கு விசா மறுக்கப்படுவதாக அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்று ஐநாவிற்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினரை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியுள்ளார்.
அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறத் தயாராகும் வகையில் அவற்றின் நிலைகளை மாற்றியமைக்கும்படி அமெரிக்க ராணுவம், ஈராக்கிய அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஈரானிய கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புஉடைய 52 இடங்களுக்குக் குறிவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறி இருந்த நிலையில், அவ்விடங்களைத் தாக்கும் எண்ணமில்லை என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
‘அமெரிக்கப் படையினர் பயங்கரவாதிகள்’
இதற்கிடையே, அமெரிக்கப் படையினர் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்தாலும் அது பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும் ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.