இயோ சூ காங் சாலையில் உள்ள இரட்சண்யப் படை (சால்வேஷன் ஆர்மி) கிரேஸ்ஹேவன் இல்லத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சிறுவனை அந்த இல்லத்தில் வசிக்கும் நான்கு இளையர்கள் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனும் அந்த இல்லத்தில் வசிப்பவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத, பிரச்சினைமிக்க நடத்தைகொண்ட சிறுவர்கள் மற்றும் இளையர்களுக்காக அந்த இல்லம் நடத்தப்படுவதாக அதன் இணையப்பக்கம் குறிப்பிட்டுள்ளது.
இத்தகையோருக்கு அந்த இல்லத்தில் பராமரிப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு ஆகியவை வழங்கப்படுவதாக இணையத்தளம் தெரிவித்தது.
சிறுவனைப் பாலியல் ரீதியாகத் தாக்க மற்ற மூவரையும் தூண்டியதாக தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
அந்த 17 வயது இளையரின் அடையாளத்தைப் பாதுகாக்க அவரது பெயரை வெளியிடப்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அந்த இல்லத்தில் உள்ள அறையில் இந்த நான்கு இளையர்களும் அந்தச் சிறுவனைப் பாலியல் ரிதீயாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து அந்தச் சிறுவனை அந்த இளையர்கள் மீண்டும் பாலியல் ரீதியாகத் தாக்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து விரிவான தகவல்களை அறிந்துகொள்ள கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியன்று இரட்சண்யப் படையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது.
ஆனால் மேல் விவரங்களுக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு இரட்சண்யப் படை கூறியது.
"கிரேஸ்ஹேவன் இல்லம் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சிறுவர்களையும் இளையர்களையும் பாதுகாக்கும் இடம். எங்கள் இல்லத்தில் வசிப்போர் பற்றிய அந்தரங்க விவரங்களை ஊடகத்திடம் வெளியிட எங்களுக்கு அனுமதி இல்லை," என்று இரட்சண்யப் படை கூறியது.
சிறுவனைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் இளையர்கள் தற்போது அந்த இல்லத்தில் வசிக்கவில்லை என்றும் வேறு இடத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
"சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சக குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை அமைச்சு சகித்துக்கொள்ளாது. எங்களது விதிமுறையின்படி, குற்றம் புரிந்ததாக நம்பப்படும் இளையர்கள் குறித்து இரட்சண்யப் படை போலிசாரிடம் புகார் செய்தது.
"பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுவனுக்கு ஆலோசனை, உளவியல் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் அந்த இல்லத்தில் தற்போது வசிக்கவில்லை. நல்ல, பாதுகாப்புமிக்க நடத்தையை வலியுறுத்த அந்த இல்லத்தின் மற்ற குடியிருப்பாளர்களுக்கு கிரேஸ்ஹேவன் இல்லம் பயிலரங்குகளை நடத்தியுள்ளது," என்று அமைச்சு தெரிவித்தது.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் 17 வயது இளையர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவருக்கு $10,000 பிணை வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 20ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்களுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரில் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

