தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று எம்ஆர்டி நிலையங்களை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்தார்.
உட்லண்ட்ஸ் நார்த், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சௌத் ஆகிய மூன்று நிலையங்களிலும் இடம்பெற்று உள்ள வசதிகளையும் வழிகளையும் பொதுமக்கள் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ரயில் நிலையங்களில் இம்மாதம் 31ஆம் தேதி முதல் அதிகாரத்துவ பயணச் சேவை தொடங்கும். தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் புதிய வழித்தடத்தின் முதற்கட்டத்தில் இடம்பெற்றுள்ள இம்மூன்றில் உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையம் தனிச்சிறப்புப் பெற்றது. சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் திட்டமிடப்பட்டு, தாமதமடைந்து வரும் ஆர்டிஎஸ் எனப்படும் விரைவு ரயில் போக்குவரத்துடன் இணையும் வசதியை அந்நிலையம் பெற்றுள்ளது.
மேலும், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் அமைக்கப்பட்டு வரும் 32 நிலையங்களில் ஆகப்பெரிய நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையத்தைத் திறந்து வைத்த பின்னர் உரை நிகழ்த்திய திரு கோ, ஆர்டிஎஸ் இணைப்பு வழியாக சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான உச்சநேர பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்கும் அளவுக்கு உட்லண்ட்ஸ் நார்த் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.
புதிதாகத் திறக்கப்பட்ட நிலையங்களைப் பார்வையிடச் சென்றோர் மூன்று நிலையங்களுக்கும் இடையிலான இலவச ரயில் பயணத்தை அனுபவித்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது முதல் பொறுமை காத்த அப்
பகுதி குடியிருப்பாளர்களுக்கு அமைச்சர் கோ நன்றி தெரிவித்தார். "உங்கள் பொறுமைக்குக் கிடைத்துள்ள பலனை இப்போது நீங்கள் அனுபவிக்கலாம்," என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் ஆறாவது எம்ஆர்டி வழித்தடமான தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், 43 கி.மீ. தூரத்திற்கு சேவையாற்றும். 2024ஆம் ஆண்டில் இது முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

