ஈரான் அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்

உக்ரேனிய பயணிகள் விமானத்தைத் தாங்கள் சுட்டு வீழ்த்தவில்லை என முதலில் கூறிவிட்டு, பின்னர் அதைத் தாங்கள்தான் செய்தோம் என ஒப்புக்கொண்ட ஈரான் அரசைக் கண்டித்து, அந்நாட்டு மக்களில் பலர் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரானியப் புரட்சிப் படைத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது. அதற்குப் பதிலடி தரும் விதமாக ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது. அதில் ஒன்று, வான்வெளியில் பறந்த உக்ரேனிய விமானத்தைத் தாக்க, அதிலிருந்த 176 பேரும் மாண்டனர்.

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவும் கனடாவும் சந்தேகம் எழுப்பின. ஆயினும், முதலில் அதை மறுத்த ஈரான், பின்னர் ‘தவறுதலாகச் சுட்டுவிட்டோம்’ என்று ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, சுலைமானியின் மரணத்தால் அமெரிக்கா மீது இருந்த ஈரான் மக்களின் கோபம், ‘பொய் சொன்ன’ தங்கள் நாட்டு அரசு மீதே திரும்பியது.

டெஹ்ரானில் உள்ள ஷாரிஃப், அமீர் கபீர் என்ற இரு பல்கலைக்கழகங்களுக்கு வெளியே விமானம் நொறுங்கி விழுந்ததில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் நேற்று முன்தினம் மாலையில் திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், நேரம் செல்லச் செல்ல, ஈரானியத் தலைவர்கள் மீது அவர்களின் கோபம் வெளிப்படத் தொடங்கியது.

விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்குக் காரணமானவர்களும் அதை மறைக்க முயன்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

அத்துடன், ஈரான் தலைவர் ஆயத்துல்லா காமேனி பதவி விலகவேண்டும் என்பதும் அவர்களது முழக்கங்களில் ஒன்றாக இருந்தது.  

ஈரான் மாணவர்களின் போராட்டத்தை வரவேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர்களது போராட்டத்தை அணுக்கமாகத் தொடர்ந்து வருவதாகவும் அவர்களின் துணிச்சல் உத்வேகம் அளிப்பதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘அப்பட்டமான விதிமீறல்’

இதனிடையே, விமானத் தாக்குதலில் மாண்டவர்களுக்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் தூதர் ராப் மெக்காயரை ஈரானிய போலிசார் கைது செய்தனர். மூன்று மணி நேர விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். 

தங்களுடைய தூதர் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்த பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப், “எந்தக் காரணமும் அல்லது விளக்கமும் இன்றி டெஹ்ரானில் எங்களின் தூதர் கைது செய்யப்பட்டது, அனைத்துலகச் சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயல்,” என்று கண்டித்துள்ளார்.

ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை திரு மெக்காயர் தூண்டிவிட்டதாக ஈரானிய ஊடகங்கள் கூறின.

இந்நிலையில், விமானம் நொறுங்கி விழுந்தது தொடர்பான விசாரணையில் அனைத்துலக ஒத்துழைப்பை வரவேற்பதாக ஈரானிய அதிபர் ஹசன் ருஹானி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசி வழியாகவும் அவர் பேசினார்.