அறிவார்ந்த இல்லங்களுக்கு அருகில் கூடுதல் பணிகள்

2023ஆம் ஆண்டுக்குள் மின்னிலக்க வட்டாரமாக பொங்கோல் திகழும் என்றும் அப்போது பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு  அவர்களது பசுமைமிக்க, அறிவார்ந்த இல்லங்களுக்கு அருகில் கூடுதல் வேலைகள் வழங்கப்படும் என்றும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் நேற்று தெரிவித்தார்.

இதனால் பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு வசதியாக இருக்கும் என்றார் அவர். 50 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட வட்டாரத்தில் வர்த்தகப் பூங்கா கட்டப்பட இருக்கிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் மூத்த அமைச்சர் டியோ கலந்துகொண்டு பேசினார். வர்த்தப் பூங்காவை தேசிய தொழிற்பேட்டை மேம்பாட்டாளரான ஜேடிசி கட்டுகிறது.

புதிய மின்னிலக்க வட்டாரம் ஏறத்தாழ 28,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அவற்றில் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான வேலைகளும் அடங்கும். “குடியிருப்புப் பேட்டைகள், மின்னிலக்க வட்டாரம் ஆகியவற்றை பொங்கோல் கொண்டிருக்கும். “வசிப்பது, வேலை செய்வது, விநியோகம் செய்வது ஆகியவற்றுக்கான புதிய வழிமுறைகளைப் பரிசோதிக்க அரசு அமைப்பு 

களுக்கும் நிறுவனங்களுக்கும் பொங்கோல் ஓர் ஆய்வுக்கூடமாக அமையும்,” என்று பொங்கோலில் உள்ள வாட்டர்வே பாயிண்ட் கடைத்தொகுதியில் உரையாற்றியபோது தெரிவித்தார் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ.

“நமது மக்கள் எவ்வாறு வசிக்கின்றனர் என்பதை வைத்துதான் அறிவார்ந்த தேசம் மதிப்பிடப்படும்,” என்றார் திரு டியோ. ‘திறந்த மின்னிலக்கத் தளமேடை’ எனும் மென்பொருள் தளமேடையால் புதிய மின்னிலக்க வட்டாரம் வழிநடத்தப்படும். இயந்திரவியல் போன்ற அறிவார்ந்த தொழில்நுட்பங்களை இந்தத் தளமேடை ஒருங்கிணைக்கும்.

அது மூலம் போக்குவரத்து நிலை, எரிசக்தி மற்றும் தண்ணீர் பயனீடு, சத்தம் மற்றும் மழையின் அளவு ஆகியவை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படலாம். திறந்த மின்னிலக்கத் தளமேடை வழங்கும் நிகழ்நிலை தரவு களைப் பயன்படுத்தி அரசாங்க அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மாணவர்களும் பசுமைத் தொழில்நுட்பங்களையும் நிலைத்திருக்கும் நகரத் தீர்வுகளையும் சோதனை செய்யலாம். வழக்கமான வர்த்தகக் கட்டடங்களைவிட பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் கட்டப்படும் கட்டடங்கள் 30 விழுக்காட்டுக்கும் குறைவான எரிசக்தியைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகரம் தொடர்பான திட்டங்களையும் நிர்வாகத்தையும் மேலும் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தரவுப் பகுப்பாய்வு வகை செய்யும் என்று திரு டியோ தெரிவித்தார். இதன் மூலம் பொதுமக்களுக்கான சேவை மேம்படும் என்றார் அவர். பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகம் அமைக்கப்படும். கழகத்துடன் வர்த்தகப் பூங்காவின் பல கட்டடங்கள் பாதசாரிகளுக்கான நடைப்பாலங்கள் மூலம் இணைக்கப்படும் என்று ஜேடிசி தெரிவித்தது.