சுடச் சுடச் செய்திகள்

வூஹான் கிருமிக்கு எதிராக அதிரடி முயற்சிகள்

வூஹான் கிருமித் தொற்றின் பாதிப்பும் உயிர் பலியும் பெருகி வரும் நிலையில் நோயை எதிர்கொள்வதெற்கென இங்கு அமைக்கப்பட்ட அமைச்சர்கள் நிலை பணிக்குழு பல அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது நடப்புக்கு வரவுள்ள இப்புதிய நடவடிக்கைகள் குறித்துப் பணிக்குழு விவரித்தது.

நாடெங்கும் கிருமி பரவாமல் இருக்க, சீனாவிலிருந்து திரும்புவோர் கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்வது, மேம்படுத்தப்பட்ட சோதனைகள் நடத்துவது எனப் பல திட்டங்கள் நடப்புக்கு வரவுள்ளன. நாளை முதல் விமான நிலையங்களில் வெப்பநிலைச் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும். தரையிறங்கும் அனைத்து விமானங்களிலிருந்தும் வெளியேறுவோர், இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

அதிலும் குறிப்பாக சீனாவிலிருந்து வரக்கூடிய அனைத்து விமானங்களிலிருந்து வெளியேறு வோர் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.  

இதற்கிடையே சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதை முடிந்தவரை தவிர்த்துவிடுமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

சீனாவிலிருந்து திரும்பும் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இதே போன்று நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த 14 நாட்களில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டோர், தங்களின் தனிப்பட்ட அமைப்புகளிடம் சுகாதார மற்றும் பயணம் தொடர்பான உறுதிமொழிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்த நாள் முதல் அடுத்த 14 நாட்களுக்கு தங்களின் உடல் நலத்தைக் கண்காணிக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொரு நாளும் இரு முறை வெப்பநிலைச் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியோருடன் நெருக்கமாகப் பணியாற்றுவோர் சீனாவிலிருந்து திரும்பிய நாளிலிருந்து 14 நாட்களுக்குக் கட்டாயமாக விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பாலர் பள்ளிகள், சுகாதாரப் பராமரிப்புத் துறை, முதியோர் பராமரிப்புத் துறை ஆகியவற்றில் பணியாற்றுவோருக்கு இது பொருந்தும்.

சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அனைத்து வழிகளிலும் முயலும் என்று நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில், பணிக்குழுவிற்குத் தலைமையேற்றவர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் வலியுறுத்தினார்.

 பல நான்காம் தலைமுறை அமைச்சர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டன.

வெப்பநிலைக் கண்காணிப்பு, நாட்டின் எல்லைகளில் மேம்படுத்தப்பட்ட சோதனைகள், பயண அறிவுறுத்தல்கள் ஆகியவை கிருமித் தொற்றின் அபாயத்தைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.

மருத்துவர்களும் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளதாக திரு கான் கூறினார்.

“இந்நிலை அதிவேகமாக பரிணமித்து வருகிறது. தேவை ஏற்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளை நடப்புக்குக் கொண்டு வருவோம்,” என்றார் அவர்.

ஆசிரியர்களின் உறுதுணையுடன் வீட்டில் இருந்தவாறே கட்டாய விடுப்பில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்வர் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சர் திரு ஓங் யி காங்.

பதற்றம், பயம், அதிர்ச்சி போன்றவற்றை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் தவறாகத் தெரிவிக்கப்படலாம். எனவே, மக்களுக்குத் துல்லியமான தகவல்கள் உடனுக்குடன் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக அரசு அதன் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று  தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பகிர்ந்துகொண்டார்.

இவ்விவகாரத்தால் வெளிநாட்டவர் மீது கடும் வெறுப்பு கொள்ளாமல் சிங்கப்பூரர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் அமைதியாக ஈடுபடுமாறு பணிக்குழுவின் இன்னொரு தலைவரான தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவுறுத்தியுள்ளார்.

“பொய்யான வதந்திகளை நம்பி பதற்றத்திற்கு ஆளாக வேண்டாம்,” என்று குறிப்பிட்ட திரு வோங், அதிகாரத்துவமாக அறிவிக்கப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.  

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon