கல்வி அமைச்சு: நிபுணர்களின் பரிந்துரையில் பள்ளிகள் திறப்பு

கல்வி அமைச்சு: நிபுணர்களின் பரிந்துரையில் பள்ளிகள் திறப்பு

2 mins read
d68d8502-a077-4627-8f7d-4cd21be40574
இலியாஸ் பார்க் தொடக்கப்பள்ளிக்கு வெளியே காணப்படும் மாணவர்களும் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வோரும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நீண்ட விடுமுறைக்குப் பிறகு நேற்று சிங்கப்பூரின் அனைத்து பள்ளிகளும் திறந்தன. இதன் தொடர்பில் மேலும் ஒன்று, இரண்டு வாரங்கள் கழித்துப் பள்ளிகளைத் திறப்பது குறித்து கல்வி அமைச்சு மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றது. அதன் பின்னரே பள்ளித் திறப்பு குறித்து முடிவு எடுத்ததாக நேற்று கூறியது.

தற்போது வூஹான் கிருமித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சீனப் புத்தாண்டு விடுமுறைக்காக மூடியிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதைத் தாமதிப்பது குறித்து கேள்விகள் எழுந்ததற்கு கல்வி அமைச்சு இவ்வாறு பதிலளித்தது. புதிய கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் ஹாங்காங் அதன் பள்ளிகளைக் கூடுதல் காலத்திற்கு மூட முடிவெடுத்ததை அடுத்து சிங்கப்பூரிலும் அவ்வாறு செய்வது குறித்து ஆலோசனை பெறப்பட்டது.

"இங்கு சமூகத்தினரிடையே கிருமித் தொற்று பரவுவதற்கான ஆதாரம் இல்லை என்பதால் பள்ளிகளைத் தொடர்ந்து மூடத் தேவையில்லை," என்று கல்வி அமைச்சு முடிவெடுத்தது.

கிருமித் தொற்று தொடங்கிய வூஹான் பகுதிக்கு மிக அருகிலேயே ஹாங்காங் உள்ளது. சீனாவிலிருந்து ஹாங்காங்குக்குத் திரும்பும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை பன்மடங்கு இருக்கும். அதனால் சிங்கப்பூரை ஹாங்காங்குடன் ஒப்பிட முடியாது என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குக் கல்வி அமைச்சு அதன் இணையத் தளத்தில் நேற்று பதிலளித்தது.

தற்போது சீனாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியுள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சமாளிக்கக்கூடியது என்றும் தரப்பட்ட 14 நாட்கள் கட்டாய விடுப்பு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், சிறப்புத் தேவைக்கான பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏறத்தாழ 800 மாணவர்கள் கட்டாய விடுப்பால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

பள்ளிகளின் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று உறுதியளித்தார்.