சிங்கப்பூர் ஆயுதப் படையினர் இரவு பகலாக தீவிரப் பணி

சிங்கப்பூர் ஆயுதப் படையினர் இரவு பகலாக தீவிரப் பணி

2 mins read
4606b8cc-464a-4d97-a80f-9548020ca100
முகக்கவசங்களைப் பொட்டலமிடும் பணியில் சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,500 சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னும் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் அந்தப் பணிகளை பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இன்று சனிக்கிழமை முதல் 5.2 மில்லியன் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட இருப்பதால் அந்தக் கவசங்களை பைகளில் அடைக்கும் பணியில் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த சுமார் 1,500 சேவையாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காய்ச்சலுடன் வரும் பயணிகளை சாங்கி விமான நிலையத்தில் உள்ள பரிசோதனைக் கருவிகள் மூலம் கண்டறிந்து அவர்களை அணுகுவதிலும் அவர்களின் தொடர்புகளைக் கண்டறிவதிலும் சிங்கப்பூர் ஆயுதப் படை சேவையாளர்கள் உதவி வருகின்றனர்.

ஜூ கூனில் உள்ள சாஃப்டி ராணுவ பயிற்சிக்கழகத்தில் முகக் கவசங்களை பொட்டலப்படுத்தும் பணிகளை தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று பார்வையிட்டார்.

முகக்கவசங்கள் சரியான நேரத்தில் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக பணிகள் நடைபெறுவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

"ஆயத்தப் பணிகளில் கவனமாக உள்ளோம். இது ஒரு தேசியப் பணி, தேசிய முயற்சி என்றபோதிலும் சிங்கப்பூர் ஆயுதப் படை அதன் அடிப்படைப் பொறுப்புகளில் கண்ணும் கருத்துமாக உள்ளது," என்றார் டாக்டர் இங்.

"முகக்கவசங்களை வழங்கும் பணி முக்கியமானது என்றபோதிலும் நாட்டைப் பாதுகாக்கும் அம்சத்தில் கவனம் தப்பாது என்பதில் தற்காப்புப் படைத் தலைவர் (லெப்டினென்ட் ஜெனரல் மெல்வின் ஓங்) மிகத் தெளிவாக இருக்கிறார்," என்றும் அமைச்சர் கூறினார்.

எனவேதான் இதர பிரிவினர் தங்களது கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் போர்ச் சேவை ஆதரவு தளபத்தியம் மட்டும் முகக் கவசங்களைப் பொட்டலமிடும் பணிகளில் உதவ அழைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

வூஹான் கொரோனா கிருமிப் பரவலைச் சமாளிக்க சிங்கப்பூரின் 1.3 மில்லியன் குடும்பங்களுக்கு தலா நான்கு முகக்கவசங்கள் வழங்கப்படும் என நேற்று முன்தினம் அரசாங்கம் அறிவித்தது.

மக்கள் கழகம் பொறுப்பேற்று விநியோகிக்கப்பட இருக்கும் முகக்கவசங்களை 89 சமூக நிலையங்களுக்கும் சமூக மன்றங்களுக்கும்சிங்கப்பூர் ஆயுதப் படை அனுப்பி வைக்கும்.

சிங்கப்பூரில் வூஹான் கொ ரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் அனைவரும் சீன குடிமக்கள். சிங்கப்பூர் சமூகத்தில் அந்தக் கிருமி பரவியதற்கான தடயம் இதுவரை இல்லை.

இது பற்றி செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் இங், ,"கிருமிப் பரவலின் ஆரம்பக்கட்டத்தில் சிங்கப்பூர் இருந்தாலும் அது கட்டுக்குள் இருப்பதையே விரும்புகிறோம். அதனையும் கடந்து கிருமி பரவினால் அதனைச் சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். வெவ்வேறு வகையான சூழ்நிலைகளைச் சந்திக்கும் திட்டங்களை சிங்கப்பூர் ஆயுதப் படை தன்வசம் கொண்டுள்ளது," என்றார்.