வூஹான் கொரோனா கிருமித்தொற்று நெருக்கடி தொடர்பில் நிச்சயமற்ற இரு சூழல்கள் நிலவுவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
வூஹான் கொரோனா கிருமி தனது இயல்பிலிருந்து மாறி அதிக அபாயகரமானதாக உருவெடுக்குமா, இதே நிலைமை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதே அவை.
இதையடுத்து, வூஹான் கிருமித்தொற்றுக்கு எதிராக சிங்கப்பூர் நீண்ட, நெடிய போராட்டத்திற்குத் தயாராகி வருவதாகக் கூறிய அமைச்சர் சான், உளவியல்ரீதியாக, உணர்வுபூர்வமாக, பொருளியல், சமூகரீதியாக ஆயத்தமாகும்படி சிங்கப்பூரர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"ஏனெனில், இந்த நிலை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் எனத் தெரியாது. சுகாதாரம், பொருளியல், வேலைவாய்ப்பு என எல்லாத் துறைகளிலும் தாக்குப் பிடிக்கும் வகையில், நீண்டகால நோக்கில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்," என்றார் அவர்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி மற்றும் ராடின் மாஸ் தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் நேற்று இவ்வாறு பேசினார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கிருமித்தொற்றுப் பரவல் சம்பவங்கள் மாதக் கணக்கிலும் ஓராண்டு வரையிலும் நீடித்ததை அவர் சுட்டினார்.
வூஹான் கிருமித்தொற்றால் உலகளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூருக்கு அத்தகைய நிலை ஏற்படாது எனக் கருதிவிடக்கூடாது என்றார் அமைச்சர்.
"ஆதலால், முகக்கவசங்கள், மருந்துப்பொருட்கள், மற்ற இன்றியமையாத தேவைகள் என எதுவாக இருப்பினும், அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை நாம் உணரவேண்டும். எவ்வளவு நாட்களுக்கு அவை தாக்குப்பிடிக்கும், சிங்கப்பூரில் அந்தப் பொருட்களுக்கான விநியோகச் சங்கிலி எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்ற அக்கறையும் கண்ணோட்டமும் அவசியம்," என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரர்கள் பதற்றமின்றி இருப்பதும் கிருமித்தொற்றைத் தடுப்பதில் கூட்டுமுயற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதும் தமக்கு உற்சாகமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தீவு முழுவதுமுள்ள 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச முகக்கவசங்கள் விநியோகிக்கும் பணி கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாநிலம், வூஹான் நகரில் தோன்றிய புதுவகை கொரோனா கிருமித்தொற்று, 2003ல் ஏற்பட்ட 'சார்ஸ்' தொற்றைவிட வேகமாகப் பரவி வருகிறது.
ஆயினும், 'சார்ஸ்' கிருமித்தொற்றைப் போல வூஹான் கொரோனா கிருமித்தொற்று அவ்வளவு அபாயகரமானதாக இல்லை. 'சார்ஸ்' பாதித்தவர்களில் நூற்றுக்கு 9.6 பேர் உயிரிழந்த நிலையில், வூஹான் கொரோனா கிருமித்தொற்று உயிரிழப்பு விகிதம் 2 முதல் 3 விழுக்காடாக இருப்பதை அமைச்சர் சான் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் இதுவரை 18 பேருக்கு வூஹான் கிருமித்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வூஹானில் இருந்து வந்தவர்கள்.
இதையடுத்து, சீனாவில் இருந்து வருவோருக்குத் தற்காலிகமாக நுழைவு அனுமதி ரத்து, விசா ரத்து, சீனா சென்று திரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால விசா வைத்துள்ளோருக்குக் கட்டாயமாக 14 நாள் விடுப்பு போன்ற நடவடிக்கைகள் மூலமாக சிங்கப்பூரில் அந்தக் கிருமித்தொற்று பரவாமல் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.
இந்தக் கிருமித்தொற்று, உலகப் பொருளியலிலும் மாற்றங்களை முடுக்கிவிடும் சாத்தியமுள்ளதால், ஊழியர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது என்று திரு சான் குறிப்பிட்டார்.
நடுத்தர வயது ஊழியர்கள் புதிய திறன்களைக் கற்றுத் தேர்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிடும் என்றும் அவர் சொன்னார்.

