நோவல் கொரோனா கிருமித்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் சீனாவுடனான எல்லைப் பகுதியை முழுமையாக மூட வலியுறுத்தி ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவுடனான ரயில், படகு சேவைகளுக்கு ஹாங்காங் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இருப்பினும், எல்லையை முழுமையாக மூடவேண்டும் என மருத்துவ ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனால், எல்லையை முற்றிலுமாக மூடுவது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கு எதிரானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கிருமித்தொற்றால் ஹாங்காங்கில் இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
"எல்லையை முழுமையாக மூடாவிடில், கொரோனா கிருமித்தொற்றைத் தடுப்பதற்குப் போதுமான மனிதவளமும் பாதுகாப்புச் சாதனங்களும் தனிமைப்படுத்துவதற்கான அறைகளும் இருக்காது," என்றார் 'மருத்துவமனை ஆணைய ஊழியர்கள் கூட்டணி' எனும் சங்கத்தின் தலைவர் வின்னி யு.
இந்நிலையில், மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் நேற்று அங்கு போராட்டத்தில் குதித்தனர். தங்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காவிடில் இன்றும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, சீனாவுடனான 13 நிலவழி சோதனைச் சாவடிகளில் பத்துச் சோதனைச் சாவடிகள் மூடப்படும் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார்.

