கிருமித்தொற்றைத் தடுக்க பல அடுக்குத் தற்காப்பு

வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலமும் உள்நாட்டிலேயும் நோவல் கொரோனா கிருமித்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் சிங்கப்பூர் பல அடுக்குத் தடுப்பரண்களை அமைத்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

ஆயினும், கொரோனா கிருமித்தொற்றை முற்றிலும் ஒழிக்க நெடுநாள் ஆகலாம் என்று திரு கான் எச்சரித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு நவம்பரில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட ‘சார்ஸ்’ கிருமித்தொற்றை முழுமையாக ஒழிக்க எட்டு மாதகாலம் ஆனதை அமைச்சர் கான் சுட்டிக்காட்டினார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹுபெய் மாநிலம், வூஹான் நகரில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா கிருமித்தொற்று இதுவரை 360க்கும் மேற்பட்டோரைப் பலிகொண்டுள்ளது. சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 17,000க்கும் மேற்பட்டோர் அக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“நோவல் கொரோனா கிருமித்தொற்று என்னவாகும் என்பது குறித்து உறுதியாக நமக்கெதுவும் தெரியாது. ஆகையால், அதனைச் சமாளிக்க நாம் ஆயத்தமாக வேண்டும்,” என்றார் அமைச்சர் கான்.

பல்வேறு மாற்றுத் திட்டங்களுக்கு சிங்கப்பூர் தயாராகி வருவதாகக் கூறிய அவர், மூன்றுவித சூழல்களைக் குறிப்பிட்டு, விளக்கினார்.

முதலாவதாக, வூஹான் தவிர்த்து மற்ற சீன நகரங்களில் அல்லது மற்ற நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று பரவும் பட்சத்தில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வராமல் தடுக்கவும் அந்தக் கிருமியைக் கட்டுப்படுத்தவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும் என்று திரு கான் தெரிவித்தார்.

“அப்படிச் செய்வதும் எளிதான ஒன்றாக இராது. நம் மக்களின், சிங்கப்பூருக்கு வருபவர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும்,” என்றார் அவர்.

சிங்கப்பூர் சமூகத்திற்குள்ளாகவே அந்தக் கிருமித்தொற்று பரவுதல் என்பது அமைச்சர் குறிப்பிட்ட இரண்டாவது சூழல்.

“பல்வேறு முயற்சிகளை நாம் எடுத்தாலும், உள்நாட்டிலேயே அந்தக் கிருமித்தொற்று பரவுவதற்கான சாத்தியமுள்ளது. அதனை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கிருமித்தொற்றை விரைவாகக் கண்டறிவதும் அது மேலும் பரவாமல் தடுப்பதுமே இதில் முக்கியமான அம்சங்கள். இதில் தனிமனிதர்கள் ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பும் அடங்கியிருக்கிறது.

“நோவல் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர் ஒருவர், அது மற்றவர்களுக்குப் பரவாவல் தடுக்கும் நோக்கில் முகக்கவசம் அணிந்து, உடனடியாக மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொண்டால், அக்கிருமித்தொற்று பரவும் அபாயம் வெகுவாகக் குறையலாம்,” என்றார் அமைச்சர்.

ஒருவேளை கிருமித்தொற்று பரவினாலும் விரைந்து செயல்படுவதன் மூலம் அது பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவலாம்.

“உள்நாட்டில் நோவல் கிருமித்தொற்று பரவலாக இருந்தால் அந்த வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் திரளும் நிகழ்ச்சிகளை ரத்து செய்தல், பள்ளிகளைத் தற்காலிகமாக மூடுதல் போன்ற நடவடிக்கைகளையும் கூடுதல் தொற்றுக் கட்டுப்பாடு, கண்காணிப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கலாம்,” என்றும் அமைச்சர் சொன்னார்.

மூன்றாவதாக, நோவல் கொரோனா கிருமி வேகமாகத் தொற்றி, பரவி, பேரளவு நோய்ப் பரவலாக உருவெடுத்தல்.

“இதுபற்றித் தெரியாது என்பதுதான் தெரியும். அத்தகையதொரு சூழலில், கிருமியின் இயல்பு மாற்றத்தைப் பொறுத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை நாம் மதிப்பிட வேண்டும்,” என்றார் திரு கான்.

சுகாதாரப் பராமரிப்பைப் பொறுத்தமட்டில், இப்படி எல்லாவித சாத்தியங்களையும் எதிர்கொள்ளும் வகையில் சிங்கப்பூர் ஆயத்தமாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, தனிமைப்படுத்துவதற்கான படுக்கைகளின் எண்ணிக்கை கடந்த இரு வாரங்களில் கிட்டத்தட்ட நூறாக உயர்த்தப்பட்டுள்ளது.

“ஒட்டுமொத்தத்தில், நாம் பதற்றமின்றியும் அதே வேளையில் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே முயற்சிகளை எடுத்ததன்மூலம் இதுவரை அக்கிருமித்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தி உள்ளோம். விரைவில் வழக்கமான சூழல் திரும்பும் என நம்புவோம். அதே நேரத்தில், மோசமான சூழலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும்,” என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!