பள்ளிகளில் பெரியளவிலான ஒன்றுகூடல்கள் இல்லை

பள்ளிகளில் பெரியளவிலான ஒன்றுகூடல்கள் இல்லை

2 mins read
b4610098-4eea-480a-88fe-11894ff39dce
சிங்கப்பூரில் முதல் முறையாக உள்ளூரிலேயே கொரோனா கிருமி பரவியதைத் தொடர்ந்து பள்ளிகளில் புதிய விதிமுறைகள் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளன. கோப்புப்படம்: எஸ்டி -

சிங்கப்பூரில் முதல் முறையாக உள்ளூரிலேயே கொரோனா கிருமி பரவியதைத் தொடர்ந்து பள்ளிகளில் புதிய விதிமுறைகள் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளன.

பள்ளி தொடங்கும்போது நடைபெறும் ஒன்றுகூடல் கூட்டம் தற்போது அந்ததந்த வகுப்பறைகளிலேயே நடைபெறுகிறது. மேலும் வகுப்புகளுக்கு வெவ்வேறு நேரங்களில் இடைவேளை விடப்படுகிறது.

தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், சிறப்புக் கல்வி பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் புதிய செயல்முறைகள் நடப்புக்கு வந்துள்ளன.

மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை சோதனை கடந்த வாரம் முதல் நடப்பில் உள்ளது.

பள்ளி முகாம்கள் மற்றும் ஒன்று கூடல் போன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள், பள்ளி ஊழியர்களை கொரோனா கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அதிகளவில் மாணவர்கள் கூடுவதை முடிந்தவரையில் குறைக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சும் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தெரிவித்தன.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுவாசக் காற்று மூலம் கிருமி பரவலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் கிருமி மேலும் பரவாமல் இருக்க பொதுமக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு தங்களைத் தாங்களே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது கொரோனா கிருமி பரவலுக்கு மஞ்சள் குறியிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் வழமைபோல் வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால், அடையாளம் காணப்படாத இடங்களில் இருந்து கிருமித் தொற்று பரவலானால், நிலைமை ஆரஞ்சு குறிக்கு மாறக்கூடும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் செவ்வாய் அன்று எச்சரித்தார்.

ஆரஞ்சுக்கு அடுத்து நிலையான சிவப்பு ஆபத்தான அடையாளக் குறியாகும். கட்டுப்படுத்த முடியாத தொற்றுநோய் பரவலை அது குறிக்கும்.

கொரோனா கிருமி பரவலைத் தடுக்க சிங்கப்பூரில் பல அடுக்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.