சிங்கப்பூரில் ஆரஞ்சு விழிப்புநிலை

சிங்கப்பூரில் நோய்ப் பரவல் விழிப்புநிலைக் குறியீடு (டோர்ஸ்கான்) ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் உட்பட மேலும் மூவர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அது மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியாக ஆரஞ்சு விழிப்புநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிங்கப்பூரில் அந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. அவர்களுள் நால்வருக்கு ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் அவர்கள் சீனாவிற்குப் பயணம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்களில் இருவர் உடல்நலம் தேறி, வீடு திரும்பிவிட்டனர். எஞ்சிய 31 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

“இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம். நிலைமையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

“சிங்கப்பூரர்கள் பதற்றமாகவும் கவலையுடனும் இருப்பர் என்பது எனக்குப் புரிகிறது. அந்தக் கிருமி தொடர்பில் அதிகமாக நாம் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகின்றன.

“இந்த நிலைமை சரியாக சிறிது காலம், அதாவது மாதக் கணக்கில்கூட ஆகலாம். ஆனாலும், வாழ்க்கை நிலைகுத்திப்போய்விடாது. கூடுதல் தகவல்களைப் பெறவும் சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்களால் ஆனதைச் செய்வோம்,” என்றார் அவர்.

ஆரஞ்சு விழிப்புநிலையின்படி, கிருமித்தொற்று சமூகத்தில் மேலும் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மார்ச் மாத விடுமுறைக்காலம் வரை பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகளும் பள்ளிகளுக்கு இடையிலான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும். தொழில்ரீதியான அவசரகாலத் திட்டங்களை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும். மருத்துவமனைகளில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.

மக்கள் அதிகம் கூடும் அவசியமில்லாத நிகழ்ச்சிகளை ரத்து செய்ய அல்லது தள்ளிப்போட பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை, அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். இருமல் அல்லது சளி இருப்பவர்களை அடையாளம் காணவும் உடல்நலம் குன்றியோருக்கு அனுமதி மறுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் காற்றோட்டமாகவும் கைகளைக் கழுவ போதிய வசதிகளும் இருக்கவேண்டும். முடிந்தால், பங்கேற்பாளர்களின் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.

14 நாள் கட்டாய விடுப்பில் இருப்பவர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது.

நாள்தோறும் குறைந்தது இருமுறையேனும் ஊழியர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க நிறுவனங்கள் வலியுறுத்தப்படுகின்றன. உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும் ஊழியர்கள் பணியிடத்தில் இருக்கக்கூடாது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்போரைத் தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் கட்டாய பரிசோதனை என, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஆரஞ்சு விழிப்புநிலையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளில் பல ஏற்கெனவே நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கான், அவை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்றும் சொன்னார்.

சீனாவின் ஹுபெய் மாநிலத்தைக் காட்டிலும் கொரோனா கிருமித்தொற்று காணப்படும் மற்ற பகுதிகளில் அதனால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு என்பதை தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் சுட்டிக்காட்டினார்.

கொரோனா கிருமித்தொற்றின் மையமாக விளங்கும் ஹுபெயில் இரண்டு விழுக்காடாக இருக்கும் அந்த விகிதம் மற்ற பகுதிகளில் 0.2 விழுக்காடாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

“சமூகத்தில் கொரோனா கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்க எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்,” என்றார் திரு வோங்.

கொரோனா கிருமித்தொற்றால் பொதுச் சுகாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிதமானது முதல் அதிகமான அளவு வரை இருக்கக்கூடும் என்பதை ஆரஞ்சு விழிப்புநிலை குறிப்பிடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!