ஓர் ஆசிரியர் உட்பட மேலும் மூவருக்குக் கிருமி பாதிப்பு

ஓர் ஆசிரியர் உட்பட மேலும் மூவருக்குக் கிருமி பாதிப்பு

3 mins read
18afc156-2231-4c4a-995c-ac83035d41b8
இதுவரை கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர். எஞ்சிய 31 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள தேசிய தொற்றுநோய் மையம். படம்: எஸ்டி, கெல்வின் லிம் -

மேலும் மூவர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக நேற்று சுகாதார அமைச்சு அறிவித்தது. அம்மூவரில் ஓர் தொடக்கக் கல்லூரி ஆசிரியரும் அடங்குவார்.

மூவருக்கும் இதற்குமுன் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அத்துடன் இம்மூவரும் சீனாவுக்குப் பயணமும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் 14 சிங்கப்பூரர்கள் உட்பட நாட்டில் 33 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதுவரை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர். எஞ்சிய 31 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்பட்டது.

ஆனால் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

53 வயது சிங்கப்பூர் ஆடவர்

முதல் சம்பவம் 53 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் தொடர்பானது. அவர் அண்மையில் சீனாவுக்குப் பயணம் ஏதும் மேற்கொள்ளாவிட்டாலும் சென்ற மாதம் 6, 11, 17 ஆகிய தேதிகளன்று மலேசியாவில் இருந்தார். தற்போது அவர் சாங்கி பொது மருத்துவமனையின் சிறப்பு அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சென்ற மாதம் 23ஆம் தேதியன்று நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அதே நாளன்று தனியார் மருந்தகம் ஒன்றுக்குச் சென்றார்.

மீண்டும் 28ஆம் தேதியன்று வேறொரு தனியார் மருந்தகத்திற்குச் சென்றார். அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்குக் கிருமித் தொற்று உள்ளது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. தெம்பனிஸ் ஸ்திரீட் 24ல் வசிக்கும் இவர், மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதற்கு முன் சீனப் புத்தாண்டுக்காக உறவினர்கள், நண்பர்களின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

42 வயது ஆசிரியர்

இரண்டாவது சம்பவம் 42 வயதுடைய சிங்கப்பூர் மாது ஒருவர் தொடர்பிலானது. இவரும் அண்மைக் காலத்தில் சீனா செல்லவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் புதன்கிழமையன்று பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மறுநாள் அவருக்குக் கிருமித் தொற்று இருப்பது உறுதியானது.

விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் இவர், பள்ளியில் இருந்த கடைசி நாள் ஜனவரி 31. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 14 நாட்கள் கட்டாய விடுப்பு தரப்பட்டுள்ளது. இலியாஸ் சாலையில் வசிக்கும் இவர், சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

39 வயது சிங்கப்பூர் மாது

மூன்றாவது சம்பவத்தில் 39 வயது சிங்கப்பூர் மாது கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

சீனாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொள்ளாத இவர், மலேசியாவில் சென்ற மாதம் 22 முதல் 29ஆம் தேதி வரை தங்கியிருந்தார். தற்போது செங்காங் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சென்ற மாதம் 30ஆம் தேதியன்று நோய்க்கான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குச் சென்றார். இவருக்குக் கிருமித் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது.

நேற்று உறுதியான மூன்று புதிய சம்பவங்களிலும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவுக்குப் பயணம் செல்லவில்லை. நேற்று முன்தினம் உறுதியான இருவரில் ஒருவரும் இதேபோன்று சீனாவுக்குச் செல்லாதவர். அத்துடன் இந்த நால்வரும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள் என்று கூறப்படுகிறது.

41 வயது சிங்கப்பூர் ஆடவர்

இந்நிலையில் நேற்று முன்தினம் கிருமி தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த 41 வயது சிங்கப்பூர் ஆடவர், தன்னுடன் பணிபுரியும் சுமார் 20 நண்பர்களுடன் ஜூரோங்கில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் 'லோஹே' உணவு உண்டதாக அறியப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த நண்பர் கூட்டத்தில் குறைந்தது எட்டு பேருக்கு நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான வீட்டில் தடைக்காப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.