வாடகை வாகன ஓட்டுநர்கள் வசம் 300,000 முகக்கவசங்கள்

வாடகை வாகன ஓட்டுநர்கள் வசம் 300,000 முகக்கவசங்கள்

2 mins read
ff118515-2dec-4068-9bba-ecb0674a7bd3
டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களை கொரோனா கிருமி தொற்றாமல் பாதுகாப்பதற்காக மொத்தம் 300,000 முகக்கவசங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். படம்: எஸ்டி, லிம் யோஹுய் -

டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களை கொரோனா கிருமி தொற்றாமல் பாதுகாப்பதற்காக மொத்தம் 300,000 முகக்கவசங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரைப் பார்க்க தங்கள் வாகனத்தில் செல்லும் பயணிகளிடம் முகக்கவசம் இல்லை என்றால் அவர்களுக்கு அந்த முகக்கவசங்களை ஓட்டுநர்கள் கொடுப்பர்.

டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்காக உடல் வெப்பநிலையைச் சோதிக்கும் நிலையங்களும் அமைக்கப்படும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது. ஓட்டுநர்களுக்குக் கொடுக்கப்படும் முகக்கவசங்கள் நான்கு நான்காகப் பொட்டலங்களில் இருக்கும். அரசாங்க இருப்பில் இருந்து இன்று முதல் ஓட்டுநர்களின் நிறுவனங்கள் மூலமாக அவை கொடுக்கப்படும்.

இந்த முகக்கவசங்கள், டாக்சிகளில் அல்லது வாடகை கார்களில் பயணம் செய்யும் உடல்நலம் சரி இல்லாத, அதேவேளையில், முகக் கவசம் இல்லாமல் மருத்துவரைப் பார்க்கச் செல்லும் பயணிகளுக்குக் கொடுப்பதற்காக ஓட்டுநர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன என்று ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, டாக்சி தொழில் நடத்தும் நிறுவனங்கள் தங்கள் கட்டடங்கள் அனைத்திலும் இன்று முதல் எட்டு உடல் வெப்பநிலைப் பரிசோதனை நிலையங்களை அமைக்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அங்கு சென்று டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்துக்கொண்டு அதற்கான ஒட்டுவில்லையையும் பெறலாம்.

கிராப், கோஜெக் போன்ற தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், சொந்தமாக உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து அது பற்றி அவர்கள் தங்கள் செயலிகள் மூலம் தெரியப்படுத்துவதை இந்நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். தீவு முழுவதும் படிப்படியாக மேலும் பல உடல் வெப்பநிலைப் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று சுமார் 60 டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிய போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, இந்த நடவடிக்கைகள் வாடகை வாகன ஓட்டுநர்களைப் பாதுகாக்கவும் அதேவேளையில் டாக்சி, தனியார் வாடகை கார்கள் பயணத்துக்குப் பாதுகாப்பானவை என்று மக்களிடம் உறுதி அளிக்கவும் இடம்பெறுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"நம்பிக்கையை மீட்டு எடுக்க ஒரு வழி காணவேண்டிய தேவை இருக்கிறது. பயணிகள் பயமின்றி வாகனங்களில் நம்பிக்கையுடன் செல்லவும் ஓட்டுநர்கள் அச்சப்படாமல் பயணிகளை ஏற்றிச் செல்லவும் வழிகாண வேண்டும்," என்று திரு ஜனில் குறிப்பிட்டார்.

காற்று மூலம் கொரோனா கிருமி பரவும் என்று தவறான கருத்து நிலவுகிறது என்றும் இந்த அச்சம் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

கொரோனா கிருமிகள் நீர்த்துளி மூலம் பரவுவதால் அதற்கேற்ற அணுகுமுறையை அரசாங்கம் கைக்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.