கொரோனா கிருமிகளைக் கொல்லும் ஊசி மருந்தைக் கண்டுபிடிக்க சிங்கப்பூர் அறிவியல் வல்லுநர்கள் பாடுபட்டு வருகிறார்கள். அந்த மருந்தை மூன்றே மாதங்களுக்குள் சோதித்துப் பார்ப்பது அவர்களின் இலக்காக உள்ளது.
அதே வேளையில், கொரோனாவுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளையொட்டி, எச்ஐவி கிருமிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்தைப் போன்ற நம்பிக்கை தரக்கூடிய மருந்துகள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தடுப்பு ஊசி மருந்தைச் சோதித்துப் பார்ப்பதற்காக, டியூக்- என்யுஎஸ் மருத்துவப் பள்ளி, நார்வேயில் தலைமையகத்தைக் கொண்டுள்ள தொற்றுநோய் ஆயத்த புத்தாக்கக் கூட்டமைப்பு என்ற ஓர் அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் தலைமை விஞ்ஞானியான பேராசிரியர் டான் சோர் சுவான் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனை மூன்று மாதங்களுக்குள் நடக்கும் வாய்ப்பு இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தடுப்பு ஊசி மருந்தை உருவாக்கி அதைப் பரிசோதித்துப் பார்க்க காலம் தேவை என்று நேற்று செய்தியாளர்களிடம் பேராசிரியர் டான் கூறினார்.
சிங்கப்பூரில் சோதனை மற்றும் சிகிச்சை ரீதியில் கொரோனாவை ஒழிக்க இடம்பெற்றுவரும் முயற்சிகளை எல்லாம் விரிவாக பகிர்ந்துகொள்வதற்காக நேற்று சிங்கப்பூரின் தொற்று நோய்த்துறை வல்லுநர்கள் எட்டு பேர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினர்.
புதிதாக உருவாக்கப்படும் ஊசி மருந்து நல்ல உடல் நலத்துடன் இருப்பவர் உடலில் சோதிக்கப்படும். அவருக்கு வேண்டாத விளைவுகள் ஏற்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படும்.
புதிய மருந்து காரணமாக அந்த நபரின் நோய்த் தடுப்பு ஆற்றல் பாதிக்கப்படுகிறதா என்பதும் கவனிக்கப்படும்.
கொரோனா கிருமிகளைக் கொல்லும் தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடிக்க அனைத்துலக அளவில் விஞ்ஞானிகள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இவ்வேளையில், கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளி களுக்குச் சிகிச்சை அளிக்க இப்போது பயன்படுத்தப்படும் மருந்துகளை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்துவதன் தொடர்பில் பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் செயல்பட்டு வருவதாக பேராசிரியர் டான் குறிப்பிட்டார்.
இருந்தாலும் இத்தகைய மருந்துகள் எந்த அளவுக்குப் பலன்தரும் என்பதைக் கண்டறிய மேலும் பரிசோதனைகளை நடத்த வேண்டி இருக்கிறது என்று நிலையத்தின் இயக்குநரான இணை பேராசிரியர் டேவிட் லாய் கூறினார்.
ஆகையால் இந்த நிலையம் பரிசோதனை நியதி நடைமுறை ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட உலக வல்லுநர்களுடன் விவாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்,
போரிடவேண்டுமென்றால் உங்கள் எதிரி யார் என்பது உங்களுக்கு நன்கு தெரியவேண்டும். என்றார் பேராசிரியர் டான்.

