பிரதமர் லீ: சிங்கப்பூர் பொருளியல் மந்தநிலை சாத்தியம்

சிங்கப்பூர் பொருளியல் மந்தநிலை அடைவதற்கு சாத்தியம் உள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு ‘சார்ஸ்’ நெருக்கடி காலகட்டத்தில் பொருளியல் பெருமளவு பாதிக்கப்பட்டது.

ஆனால், அதனையும் மிஞ்சும் அளவுக்கு தற்போதைய கொரோனா கிருமி பரவல், பொருளியலில் கடும் விளைவுகளை எற்படுத்தியுள்ளது.

இதனால் சிங்கப்பூர் பொருளியல் மந்தநிலையை எட்டக்கூடும் என்றார் அவர்.

சாங்கி விமான நிலையம் முனையம் 3க்கு இன்று (பிப்ரவரி 14) வருகையளித்த திரு லீ, செய்தியாளர்களிடம் பேசியபோது மேற்கண்டவாறு கூறினார்.

“சார்ஸ் காலத்தைவிட தற்போது ஏற்பட்டுள்ள விளைவுகள் அதிகம். மேலும், வட்டார நாடுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதால் சிங்கப்பூரின் பொருளியலும் பாதிப்படையும்,” என்ற பிரதமர், இவ்வட்டாரப் பொருளியலில் சீனா முக்கிய பங்கு வகிப்பதையும் சுட்டிக்காட்டினார்.

“பொருளியல் மந்தநிலை அடையுமா இல்லையா என்பதைத் தற்போது என்னால் கூற முடியாது, ஆனால் அதற்கான சாத்தியமுள்ளது. கண்டிப்பாக சிங்கப்பூரின் பொருளியல் பாதிப்படையும்,” என்று பிரதமர் கூறினார்.

கடந்த 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரை முதல் முறையாக ‘சார்ஸ்’ தாக்கியது. அதிலிருந்து சிங்கப்பூர் மீண்டு வர ஐந்து மாத காலமானது. அதே ஆண்டில் ஜூலையில்தான் சார்ஸ் நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டது.

தற்போது ‘கொவிட்-19’ எனும் கொரோன கிருமி நோயைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் கடுமையாகப் போராடி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூஹான் நகரில்தான் முதல்முறையாக இந்த விசித்திரக் கிருமி தலைதூக்கியது.

இந்த நிலையில், கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கிருமி பரவலால் சிங்கப்பூரின் பயணத்துறை உட்பட பல துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாண்டு சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் 25% முதல் 30% வரை சரியும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று சாங்கி விமான நிலையத்தில் முதல் நிலையில் பணியாற்றும் ஊழியர்களை பிரதமர் லீ சந்தித்துப் பேசினார்.

“உங்களைக் காணவே இங்கு வந்தேன். உங்கள் உடல்நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்,” என்று ஊழியர்களிடம் திரு லீ சொன்னார். 

கிருமி பரவக்கூடிய ஆபத்தான சூழ்நிலையிலும் விமான நிலைய ஊழியர்கள் துடிப்புடன் செயல்படுவதை அவர் பாராட்டினார்.