வீட்டிலேயே இருங்கள்: 12 மணி நேரத்தில் 77 பேருக்கு ஆணை

கடந்த இரு வாரங்களுக்குள் சீனாவில் இருந்து திரும்பியவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கவேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வந்த 12 மணி நேரத்திற்குள் அது தொடர்பான 77 அறிவிப்புக் கடிதங்களை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வழங்கியிருக்கிறது. 

ஹுபெய் மாநிலம் தவிர்த்து சீனாவின் மற்ற பகுதிகளுக்குச் சென்று வந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்ட கால அனுமதி அட்டை  வைத்திருப்போருக்குப் பொருந்தும் இந்த உத்தரவு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணிக்கு நடைமுறைக்கு வந்தது. ஹுபெயில் இருந்து சிங்கப்பூர் திரும்புவோர் தனிமைப்படுத்தப்படுவர்.

புதிய அறிவிப்புக் கடிதம் கிடைத்தவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது. இது கட்டாய விடுப்பைக் காட்டிலும் கடுமையான உத்தரவாகும். கட்டாய விடுப்பில் இருப்பவர்கள் இன்றியமையாத பொருட்களை வாங்க வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

வீட்டிலேயே இருக்கவேண்டிய காலத்தில் விதிமீறுவோர் மீது தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.

முதல்முறை குற்றம் புரிவோருக்கு $10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதம் வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம். மறுபடியும் அதே குற்றத்தைப் புரிந்தால் அபராதம் $20,000 வரையும் சிறைத் தண்டனை ஓராண்டு வரையும் உயரக்கூடும்.

நிரந்தரவாசிகள், அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், மாணவர்கள் போன்றோரின் மறுநுழைவு அனுமதிக் காலம் குறைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

விதிமீறும் மாணவர்கள் மீது இடைநீக்கம் அல்லது கல்வி நிலையத்தைவிட்டே வெளியேற்றப்படுதல் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.  

சுகாதார அமைச்சின் இந்த ‘வீட்டிலேயே தங்கியிருக்கும்’ உத்தரவுக் கடிதத்தை சோதனைச் சாவடிகளில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். உத்தரவை மீறும் பட்சத்தில் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் அக்கடிதங்களைப் பெறுவோர் எச்சரிக்கப்படுகின்றனர்.