சிங்கப்பூரில் 'கொவிட்-19' கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, தொழிலாளர் இயக்கத்தின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சுமார் 70 தொண்டூழியர்கள், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு 5,500 பராமரிப்புப் பைகளை விநியோகிக்க நேற்று ஒன்றுதிரண்டனர்.
ஒன் மரினா பொலிவார்ட்டில் உள்ள என்டியுசி சென்டர், ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தேவன் நாயர் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகம் ஆகிய இரு இடங்களில் பராமரிப்புப் பைகளைத் தயார்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்காக தேவன் நாயர் வேலை வாய்ப்பு, வேலைத் திறன் பயிற்சிக் கழகத்தில் 40 தொண்டூழியர்கள் 3,000 பராமரிப்புப் பைகளைத் தயார் செய்தனர்.
துப்புரவாளர்கள், பாதுகாவல் அதிகாரிகள், ஊடகப் பணியாளர்கள், டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு என்டியுசி சென்டரில் 30 தொண்டூழியர்கள் சேர்ந்து 2,500 பராமரிப்புப் பைகளைத் தயார் செய்தனர்.
இங்குள்ள பொதுப் பராமரிப்புக் கழகங்களுக்கும் முதல்நிலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்தப் பைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் துணைத் தலைமைச் செயலாளர் டாக்டர் கோ போ கூனும் இணைந்து நாளை மறுதினம் டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள முதல்நிலை ஊழியர்களிடம் இந்தப் பராமரிப்புப் பைகளில் சிலவற்றை விநியோகிக்க உள்ளனர்.
நொறுக்குத் தீனிகள், கை சுத்திகரிப்பான்கள் உள்ளிட்ட இதர சுகாதாரப் பராமரிப்புப் பொருட்கள் இந்தப் பைகளில் உள்ளடங்கும்.
தொண்டூழியர்களுக்கு நன்றி தெரிவித்து, பராமரிப்புப் பைகளைத் தயார் செய்யும் நடவடிக்கையில் பங்கேற்க, தேவன் நாயர் வேலை வாய்ப்பு, வேலைத் திறன் பயிற்சிக் கழகத்திற்கு திரு இங் நேற்று வருகை புரிந்தார்.

