கொவிட்-19 கிருமித்தொற்று விழிப்புநிலையை ஆக உச்சநிலைக்கு தென்கொரியா உயர்த்தி உள்ளது. சீனாவுக்கு வெளியே கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நாடாக தென்கொரியா மாறி வருகிறது.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 169 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 602 ஆனது. இவர்களில் பெரும்பாலானோர் தென்கிழக்கு நகரான டேகுவில் உள்ள ஒரு தேவாலயத்தோடு தொடர்புகொண்டவர்கள். ஷின்சியோன்ஜி இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங் கேற்ற 61 வயது மாதுவிடம் கிருமித்தொற்று காணப்படுவதாக கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. அந்தப் பெண் அண்மையில் வெளிநாட்டுப் பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று கண்டறியப்பட்டது.
தென்கொரியாவில் இதுவரை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் அல்லது 55 விழுக்காட்டினர் அந்தத் தேவாலயத்தோடு தொடர்புகொண்டவர்கள் என கொரிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் கூறியது. டேகு நகரின் நிலைமையை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிலையத்தின் இயக்குநர் ஜியோங் எவுன்-கியோங் செய்தியாளர்களிடம் கூறினார்.
தென்கொரியாவில் ஆரம்ப கட்டத்தில் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களுக்கும் சீனாவுக்கும் தொடர்பு இருந்தது. ஆனால் புதிதாக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பெரும்பாலானோர் டேகு தேவாலயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். இந்நகரமும் கிருமி பரவல் அதிகம் காணப்படும் சியோங்டோ நகரமும் சிறப்புப் பராமரிப்பு வட்டாரங்களாக கொரிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனோ கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 56 வயது மாது ஒருவர் கியுங்பூக் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் நேற்று மாண்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஜனவரி 20ல் தென்கொரியாவின் முதல் கொரோனா கிருமித்தொற்று சம்பவம் பதிவானது. நேற்று வரை அங்கு ஐவர் உயிரிழந்துவிட்டனர். நான்காவது மரணமும் நேற்றுதான் நிகழ்ந்தது. 57 வயது ஆடவர் சியோங்டோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

