வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மீறிய நபரின் நிரந்தரவாச தகுதி பறிப்பு

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 45 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவருக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
உத்தரவை மீறியதற்காக தனது நிரந்தரவாசத் தகுதியை அவர் இழந்துள்ளார்.அத்துடன் அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இன்று தெரிவித்தது.

இம்மாதம் 20ஆம் தேதியன்று சிங்கப்பூர் வந்தடைந்த அந்த ஆடவர், அதற்கு முன் சீனாவுக்குச் சென்றிருந்ததால் அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் அதிகாரிகளால் தொலைபேசி மூலம் நபரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அத்துடன் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளில் கூறப்பட்ட முகவரியில் நபர் இல்லை. 

அதைத் தொடர்ந்து 23ஆம் தேதியன்று சிங்கப்பூரை விட்டுச் செல்ல நபர் முயன்றார். உத்தரவை மீறுவதாக எச்சரிக்கப்பட்டதுடன் தண்டனைக்கும் ஆளாகலாம் என்று அதிகாரிகள் அவரிடம் கூறினர்.அப்படி இருந்தும் போயே தீரவேண்டும் என்று நபர் விடாப்பிடியாக இருந்தார்.

இதையடுத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.