மலேசிய பிரதமராக பதவியேற்றார் முகைதீன்

மலேசிய பிரதமராக பதவியேற்றார் முகைதீன்

3 mins read
7022b61e-5706-4a31-aaa0-18f34dd7ad99
மலேசிய மாமன்னர் அப்துல்லா ரியாத்துடினிடமிருந்து (வலது) பதவி பத்திரங்களைப் பெற்றுக்கொள்கிறார் புதிய பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரு முகைதீன் யாசின் (இடது). படம்: இபிஏ -

மலேசியாவில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, பிரிபூமி பெர்சத்து மலேசிய கட்சி (பெர்சத்து) செயல் தலைவர் முகைதீன் யாசின் அந்நாட்டின் எட்டாவது பிரதமராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

எனினும், முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, புதிய பிரதமராக திரு முகைதீன் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்க மறுத்து உள்ளது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தமக்குப் பெரும்பான்மை இருப்பதாக டாக்டர் மகாதீர் நேற்று மீண்டும் கூறினார்.

"இனிமேல் என்னைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்ட மாமன்னர், திரு முகைதீனை பிரதமராக நியமனம் செய்தார்.

"நாடாளுமன்றத்தில் முகைதீனுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை மாமன்னரிடம் தெரிவிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தேசிய அரண்மனையை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை," என்று செய்தியாளர்களிடம் டாக்டர் மகாதீர் வருத்தத்துடன் கூறினார்.

"இங்கு நடந்திருக்கும் நிகழ்வு மிகவும் விசித்திரமான ஒன்று. கடந்த தேர்தலில் தோற்றவர்கள் இப்போது ஆட்சி அமைக்கவுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகின்றனர்," என்று டாக்டர் மகாதீர் புலம்பினார்.

திரு முகைதீனுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதா என்பதை உறுதிசெய்ய நாடாளுமன்றம் அவசரமாகக் கூடுவதற்கு தாம் கோரிக்கை விடுக்கப்போவதாக அவர் சொன்னார்.

"புதிய பிரதமருக்கு ஆதரவு உண்டா இல்லையா என்பதை எம்.பி.க்களே முடிவு செய்யட்டும். அவர்களின் முடிவே அதிகாரபூர்வ முடிவு," என்று கூறிய டாக்டர் மகாதீர், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாகவே எம்.பி.க்களை முகைதீன் நிர்வாகம் தன்வசமாக்கிவிடக்கூடும் என்று கவலை தெரிவித்தார்.

கடந்த வாரம் பிரதமர் பதவியிலிருந்து டாக்டர் மகாதீர் விலகினார். அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட மாமன்னர் அப்துல்லா ரியாத்துடின், புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரை இடைக்காலப் பிரதமராக நியமித்திருந்தார்.

"பிரதமர் பதவியிலிருந்து விலகியது குறித்து வருத்தம் அடைகிறீரா?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அம்னோ கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க பெர்சாத்து கட்சி முற்படுவதைக் கண்ட தாம், வேறு வழியின்றி பதவி விலகியதாகக் கூறினார்.

'முகைதீன் துரோகம் செய்துவிட்டார்'

திரு முகைதீன் தமக்கு இழைத்த துரோகம் தம்மை மிகவும் நோகச் செய்துள்ளதாக டாக்டர் மகாதீர் வேதனை தெரிவித்தார். "இதைச் சாதிக்க நீண்டகாலமாக பின்னணியில் முகைதீன் வேலை செய்து வந்துள்ளார். இப்போது அதைச் சாதித்துவிட்டார். "அம்னோவில் ஊழல் கறை படியாதவர்களை இணைத்துக்கொண்டு பணியாற்ற நான் தயாராக இருந்தேன். ஆனால், அம்னோவை அப்படியே ஒட்டுமொத்தமாக சேர்த்துக்கொள்ள தயாராக முகைதீன் இருந்தார். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.

"அம்னோ உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த நீதிமன்ற விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர்களை அப்படியே கட்சியில் சேர்த்துக்கொள்ள நான் இணங்கவில்லை. எனவே, இந்த ஊழல் விசாரணைகள் முடியும்வரை அவரைக் காத்திருக்கச் சொன்னேன்.

"அவர்கள் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்ப்பு வந்தால் யோசிப்போம். ஆனால், குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தேன். நான் சொன்னதை முகைதீன் கேட்கவில்லை," என்று டாக்டர் மகாதீர் நினைவுகூர்ந்தார்.

'நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படலாம்'

இந்நிலையில், இம்மாதம் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படலாம் என்று நாடாளுமன்ற நாயகர் முகம்மது ஆரிஃப் முகம்மது யூசோஃப் நேற்று தெரிவித்தார்.

"இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துடன் நாளை (இன்று) நான் அதிகாரபூர்வமாக கலந்தாலோசிப்பேன்," என்று அவர் கூறியதாக மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டது.

புதிய மலேசியப் பிரதமருக்கு பிரதமர் லீ வாழ்த்து

இதற்கிடையே, திரு முகைதீனின் தலைமைத்துவத்தின்கீழ், மலேசிய-சிங்கப்பூர் உறவு மேம்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொலைபேசிவழி திரு முகைதீனுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட திரு லீ, சிங்கப்பூருக்கு வருகை அளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

"1985ஆம் ஆண்டில் திரு முகைதீனை நான் முதன்முறையாக சந்தித்தேன். ஆசியான் பொருளியல் அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்பதற்காக, சிங்கப்பூரில் அப்போது வர்த்தக, தொழில் அமைச்சராக இருந்த டாக்டர் டோனி டானுடன் சேர்ந்து கோலாலம்பூருக்குச் சென்றேன்.

"அப்போது மலேசியாவின் வர்த்தக, தொழில் துணை அமைச்சராக இருந்த திரு முகைதீன், விமான நிலையத்தில் எங்களை வரவேற்றார்," என்று திரு லீ நினைவுகூர்ந்தார்.

"பிரதமர் முகைதீனின் தலைமைத்துவத்தின்கீழ், மலேசியாவுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள நீண்டகால உறவு மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

"சிங்கப்பூருக்கு வருகை அளிக்குமாறு அவருக்கு நான் அழைப்பு விடுத்தேன். அவரை மீண்டும் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்," என்று நேற்று வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் திரு லீ குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள் பக்கம் 6