கொவிட்-19 பாதிப்பு: வடக்கு இத்தாலி முடங்கியது

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று எதிரொலியாக இத்தாலியின் வடமேற்கு மாநிலமான லோம்பர்டியிலும் மத்திய, வட மாநிலங்களைச் சேர்ந்த வேறு 14 நகரங்களிலும் வசிக்கும் 16 மில்லியன் மக்கள் தடைக்காப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மிலான், வெனிஸ் ஆகிய முக்கிய நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பள்ளிகள், உடற்பயிற்சிக்கூடங்கள், இரவுக் கேளிக்கை மன்றங்கள், அரும்பொருளகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்படும் என்று பிரதமர் ஜுசெப்பே கோன்டே அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக லோம்பர்டியில் வசிக்கும் பத்து மில்லியன் மக்களும் அப்பகுதியைவிட்டு வெளியேற முடியாது; வெளியாட்கள் அங்கு நுழைய முடியாது. இறுதி ஊர்வலங்களுக்கும் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் கூட்டு வழிபாடு இராது.

உணவுக்கடைகளும் காப்பிக்கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கலாம். ஆனால், வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் தூரம் தள்ளி அமர்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில், விமானங்களும் ரயில்களும் தொடர்ந்து இயக்கப்படும். அவசரகாலத் தேவைகளுக்கு, வேலைகளுக்காக வெளியில் செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவர். இருந்தாலும், லோம்பர்டியைவிட்டு வெளியேற அல்லது அங்கு நுழைய முயல்பவர்களைத் தடுத்து நிறுத்தி, கேள்வி கேட்கும் அதிகாரம் போலிசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

கொரோனா கிருமித்தொற்றால் ஐரோப்பாவில் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது இத்தாலிதான். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி கிருமித்தொற்றால் அங்கு 5,883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 233 பேர் உயிரிழந்துவிட்டனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் அங்கு 36 பேர் மரணமடைந்தனர்; 1,200க்கும் மேற்பட்டோரைக் கிருமி தொற்றியது. 589 பேர் கிருமித்தொற்றில் இருந்து மீண்டுவிட்டனர்.

மாண்டவர்களின் சராசரி வயது 81க்கும் மேல் என தேசிய சுகாதார நிலையத்தின் இயக்குநர் சில்வியோ புருசஃபெரோ தெரிவித்தார். அவர்களில் ஆண்களே அதிகம் என்றும் ஐந்தில் நால்வர் ஏற்கெனவே வேறு சில உடல்நலக் கோளாறுகளும் இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் மக்களின் சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க விரும்புகிறோம். அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என நாங்கள் அறிந்துள்ளோம். ஆயினும், ஒவ்வொருவரும் பொறுப்புடன் இருக்க வேண்டிய நேரமிது,’ என்று திரு கோன்டே கூறினார்.

அனைத்துப் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் பத்து நாள்களுக்கு மூடப்படுவதாகக் கடந்த வாரம் இத்தாலி அரசாங்கம் அறிவித்திருந்தது.

கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் அரசாங்கம் இந்த முடக்கத்தை அறிவித்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு புதிதாக 20,000 மருத்துவர்களையும் தாதியரையும் பணியில் அமர்த்த இத்தாலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் பொருளியல் ஏற்கெனவே தடுமாற்றம் கண்டு வரும் நிலையில், கொரோனா கிருமித்தொற்று மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிருமித்தொற்றையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சமாளிப்பதற்காக 7.5 பில்லியன் யூரோ செலவிடப்படும் என அரசாங்கம் உறுதி கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!