தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கோல், பாசிர் ரிஸ் வாசிகளுக்கு பயணத்தை எளிதாக்க புதிய 4 ரயில் நிலையங்கள்

2 mins read
5e993afe-37ce-42e9-924c-41c1acba8664
திருவாட்டி சுன், டாக்டர் ஜனில் ஆகிய இருவரும் எதிர்காலத்தில் அமையவுள்ள பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்தின் சுரங்கப்பாதைப் பணிகளைப் பார்வையிட்டபோது இந்தத் தகவல்களை வழங்கினர். இந்த ரயில் நிலையம் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்துக்கு அருகில் அமையும். பணிகளை மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

பொங்கோல் நகரவாசிகள் தெம்பனிஸ், பாசிர் ரிஸ் போன்ற பகுதிகளுக்கு விரைவில் சென்றடைய ஏதுவாக நான்கு புதிய ரயில் நிலையங்கள் 2031க்குள் அமைக்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 2040 நிலப் போக்குவரத்து பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக இது அமைகிறது.

குறுக்கு தீவு ரயில் பாதையின் விரிவாக்கமாக அமையவுள்ள இந்தப் பாதை, அந்தத் தடத்தில் தற்போது செயல்படும் பேருந்துச் சேவைகளுக்கு பிற்சேர்க்கையாக இருக்கும்.

இந்தப் புதிய விரிவாக்கத்தின் மூலம் பயண நேரம் வெகுவாகக் குறையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (மார்ச் 10) தெரிவித்தது. உதாரணமாக, பொங்கோல் சென்ட்ரலிலிருந்து பாசிர் ரிஸ் செல்வதற்கான பயண நேரத்தில் 25 நிமிடம் வரை குறைய வாய்ப்புள்ளது. தற்போது இந்தப் பயணத்துக்கு 40 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகிறது.

புதிதாக அமையவுள்ள இந்த ரயில் பாதையில் பொங்கோல், ரிவேய்ரா, இலாயஸ், பாசிர் ரிஸ் என நான்கு நிலையங்கள் அமையும்.

இந்த ரயில் பாதைப் பணிகள் 2022ல் தொடங்கும் என்றும் 2031ஆம் ஆண்டுக்குள் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் ஆணையத்தின் இன்றைய செய்தி குறிப்பிட்டது.

பொங்கோல், ரிவேய்ரா, பாசிர் ரிஸ் ஆகியவை மற்ற தடங்களுடன் இணைக்கும் இணைப்பு நிலையங்களாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிர் ரிஸ்ஸில் கிழக்கு-மேற்கு பாதையுடனும் பொங்கோலில் வடக்கு-தெற்கு பாதையுடனும் இணையும் இந்தப் பாதை, ரிவெய்ரா நிலையத்தில் பொங்கோல் இலகு ரயில் பாதையுடன் இணையும். பாசிர் ரிஸ் டிரைவ் 12க்கு அருகில் இலாயஸ் நிலையம் அமையும்.

இந்தப் பாதையின் மூலம் 40,000க்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

"பொங்கோலும் பாசிர் ரிஸ்ஸும் அருகருகே இருக்கின்றன. இந்தப் புதிய பாதையின் மூலம் இரு பகுதிகளுக்கும் இடையே பயணம் எளிதாகும்," என்று மூத்த நாடாளுமன்றச் செயலாளரும் பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான திருவாட்டி சுன் சூலிங் குறிப்பிட்டார்.

திருவாட்டி சுன், டாக்டர் ஜனில் ஆகிய இருவரும் எதிர்காலத்தில் அமையவுள்ள பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்தின் சுரங்கப்பாதைப் பணிகளைப் பார்வையிட்டபோது இந்தத் தகவல்களை வழங்கினர். இந்த ரயில் நிலையம் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்துக்கு அருகில் அமையும். பணிகளை மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

#பொங்கோல் கோஸ்ட் #பொங்கோல் #குறுக்கு ரயில் பாதை

குறிப்புச் சொற்கள்