வரும் திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறப்பு

வரும் திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறப்பு

1 mins read
6046bbd1-c451-4b93-98d6-73585a602066
-

பள்ளிகளும் பாலர் பள்ளிகளும் வரும் திங்கட்கிழமை கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திட்டமிட்டபடி திறக்கவுள்ளன.

சிங்கப்பூரில் இதுவரை ஆக அதிகமான எண்ணிக்கையான 47 புதிய கொவிட் 19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நேற்று (புதன்கிழமை) பதிவாகியுள்ளன.

இந்நிலையில், கல்வி அமைச்சு, சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஆரம்பகால பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டன.

மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கி விடுமுறையின்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து நாடு திரும்பும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 14 நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும்படியான உத்தரவு வழங்கப்படும். மேலும் இணைப்பாட நடவடிக்கைகளின் தற்காலிக ரத்து, மாணவர்கள் அமரும்போது அவர்களுக்கு இடையே இடைவெளி இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவை முன்னெச்சரி க்கை நடவடிக்கைகளில் அடங்கும்.

பாலர் பள்ளிகள் தங்கள் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் கூடுதலாக வெப்பநிலை பரிசோதனைகளை நடத்தும். பள்ளி விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்ற சில அனுமானங்கள் நிலவிவரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

"கல்விக் கட்டமைப்பைக் கட்டிக்காத்து மாணவர்களை பாதுகாப்புடன் வைத்திருப்பதில் ஆக அதிகமான முக்கியத்துவத்தை நாம் கொடுக்கவேண்டும். இந்தக் கட்டமைப்பை திடமாகக் காப்பதன் மூலம் இது இயங்கும். பலரது வாழ்க்கையிலும் இடையூறுகள் ஏற்படுவதற்குத் தேவை இருக்காது. இல்லாவிட்டால், மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் இடங்களிலும் பணியாற்றும் பெற்றோர் பலரால் வேலைக்கு போக இயலாது, " என்று கல்வியமைச்சர் ஓங் யீ காங் தமது ஃபேஸ்புக்கில் இன்று பதிவிட்டார்.