தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

96% விமானங்களை நிறுத்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்

2 mins read
846a4e22-ef5d-4540-a405-b4c4acf5f49d
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) அடுத்த மாத இறுதி வரை 96% விமானங்களைச் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவுசெய்து இருக்கிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) அடுத்த மாத இறுதி வரை 96% விமானங்களைச் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவுசெய்து இருக்கிறது.

கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக உலக நாடுகள் பலவும் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இதனால் பெரும்பாலான விமானச் சேவை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், எஸ்ஐஏ நிறுவனமும் தனது 147 நிறுவனங்களில் 138 விமானங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க இருக்கிறது. எஞ்சியுள்ள ஒன்பது விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்.

அந்நிறுவனத்தின் மலிவுக் கட்டண சேவைப் பிரிவான ஸ்கூட் நிறுவனமும் சேவைகளைக் குறைத்துக்கொள்ள இருக்கிறது. மொத்தமுள்ள 49 விமானங்களில் 47ஐ ஸ்கூட் தற்காலிகமாக நிறுத்திவைக்கவுள்ளது.

மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாலும் அல்லது விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்து வருவதாலும் அனைத்துலகச் சந்தையில் அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இருப்பதாக சிஎஸ்ஐஏ கூறியது.

"எங்களது சேவைகள் எப்போது வழக்கநிலைக்குத் திரும்பும் எனத் தெளிவாகத் தெரியவில்லை. கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் எப்போது அகற்றப்படும் என்பதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இதன் விளைவாக விமானப் போக்குவரத்திற்கான தேவை கடுமையாகச் சரிந்துள்ளது. இதனால் பயணிகள் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருவாயும் கணிசமாகக் குறைந்துவிட்டது," என்று ஓர் அறிக்கை மூலம் எஸ்ஐஏ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், ஏப்ரலில் எஸ்ஐஏ நிறுவனத்திற்கு $140 மில்லியன் இழப்பு ஏற்படலாம் என்றும் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி கிட்டாவிடில் ஜூன் மாத இறுதியில் அந்நிறுவனம் அபாயகரமான நிலைக்குச் சென்றுவிடலாம் என்றும் 'யுஓபி கே ஹியன்' நிறுவனத்தின் கே.அஜீத் எச்சரித்துள்ளார்.

இன்றிரவு முதல் வெளிநாட்டவர்கள் குறுகிய கால விசாவில் எவரும் சிங்கப்பூர் வரவும் அல்லது சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணத்திற்கு எதிரான இத்தகைய சூழலில், குறுகிய காலத்தில் எளிதில் விற்று ரொக்கமாக்கக்கூடிய சொத்துகளைச் சேர்ப்பதிலும் மூலதனச் செலவினங்களை, நடைமுறைச் செலவுகளைக் குறைக்கவும் எஸ்ஐஏ நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (மார்ச் 24) அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#சிங்கப்பூர் #SIA #விமானச்சேவை ரத்து

குறிப்புச் சொற்கள்