'பாதுகாப்பான இடைவெளி' ஆலோசனையை பின்பற்றாத 21 வேலையிடங்களில் அமலாக்க நடவடிக்கை

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கிய 'பாதுகாப்பான இடைவெளியைக் கடப்பிடிக்கும்' ஆலோசனையை நடைமுறைப்படுத்தாத 21 வேலையிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த ஆலோசனை நடைமுறைக்கு வந்த முதல் நாளான நேற்று அதனைப் பின்பற்றாத வேலையிடங்களுக்கு 13 வேலை நிறுத்த ஆணைகளும் 8 குறை களைவு ஆணைகளும் வழங்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.

குறைகள் களையப்படும் வரை இந்த ஆணைகள் நடப்பில் இருக்கும்.

அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிபுரியக்கூடிய தொழிற்சாலைகள், கட்டுமானத் தளங்கள், கப்பல் பணிமனைகள் போன்ற இடங்களில் சோதனைகள் செய்யப்பட்டன.

சில நிறுவனங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததையும் அமைச்சு குறிப்பிட்டது. 

சாத்தியம் இருந்தால் அனைத்து ஊழியர்களையும், குறிப்பாக எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வயதானவர்கள், கர்ப்பிணிகள், வேறு உடல்நலைப் பிரச்சினைகள் இருப்போர் உள்ளிட்டோர் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு அமைச்சு நிறுவனங்களுக்கு நினைவூட்டியது.

நிறுவனத்துக்குச் சென்று வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்போர், வேலையிடத்திலும் சந்திப்பு அறைகள், ஓய்வு அறைகள் உணவருந்தும் அறைகள் போன்ற ஒன்றுகூடும் இடங்களில், பாதுகாப்பான இடைவெளியாக குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியில் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். 

அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கும் நேரத்தைக் குறைப்பதுடன், மாறுபட்ட வேலை நேரங்கள், முக்கியமற்ற நிகழ்ச்சிகளைத் தள்ளி வைத்தல், முக்கியமான நிகழ்ச்சிகளின் பிரம்மாண்டத்தைக் குறைத்தல், குழுக்களாகப் பிரித்து செயல்படுதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. 

பாதுகாப்பான இடைவெளியில் பணிபுரிவது தொடர்பாக ஊழியர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். 

"அத்தகைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த நிறுவனங்களின் வேலை நடைமுறையில் நெகிழ்வுத் தன்மை தேவைப்படும். ஆனால், கொவிட்-19 பரவலைக் குறைக்க இத்தகைய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. பணியாளர்களும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வதுடன் தனிநபர் சுத்தம், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைப் பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்," என்று வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆணையர் திரு சிலாஸ் சிங் கூறினார்.

இத்தகைய சோதனைகள் தொடரும் என்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத வேலையிடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

இதற்கிடையே, சிங்கப்பூர் நாணய ஆணையம் இதுபோன்றதொரு ஆலோசனைக் குறிப்பை சிங்கப்பூரில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு நேற்று வழங்கியது. வர்த்தகத்தின் அனைத்து நடைமுறைகளிலும், குறிப்பாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படும் இடங்களில், பாதுகாப்பான இடைவெளி நடைமுறையைக் கடைப்பிடிக்க அது ஆலோசனை வழங்கியுள்ளது.

நிதி நிறுவனங்களின் வளாகங்களில் மக்கள் காத்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களை மின்னியல் தளங்களில் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்குமாறு அவை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சேவைகளை வழங்குவதில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது, அங்கு வருவோரின் தகவல்களைச் சேகரிப்பது ஆகியவற்றையும் மேற்கொள்ள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

#சிங்கப்பூர் #பாதுகாப்பான இடைவெளி நடைமுறை

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!